Published : 30 Dec 2021 08:18 AM
Last Updated : 30 Dec 2021 08:18 AM
புதுச்சேரியில் இருந்து சென் னைக்கு இசிஆர் மற்றும் பைபாஸ் வழியாக 13 பிஆர்டிசி பேருந்துகளும், காரைக்காலில் இருந்து 6 பிஆர்டிசி பேருந்துகளும் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழக பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று வருகின்றன.
இதனிடையே இசிஆர், பைபாஸ் வழியாக சென்னை செல்லும் பிஆர்டிசி மற்றும் தமிழக அரசு பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இடையே நீண்ட காலமாக ‘டைமிங்’ பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது குறித்த புகார் எழுந்த நிலையில், இதனை சரிசெய்ய புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் இருமாநில அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி சுமூக முடிவு செய்தார். அதன்படி பிஆர்டிசி அதிகாரிகள் மற்றும் தமிழக போக்குவரத்துத் கழக அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுலா மைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி சார்பில் போக்குவரத்து துறை அலுவலக ஆடிஓ சீத்தாராம ராஜு, பிஆர்டிசி நிர்வாக மேலாளர் ஏகாம்பரம், உதவி மேலாளர் குழந்தைவேலு மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக எஸ்சிடிசி கிளை மேலாளர் துரைராஜ், விழுப்புரம் டிஎன்எஸ்டிசி சேகர் ராஜ், காஞ்சிபுரம் டிஎன்எஸ்டிசி தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், அனைத்து சென்னை செல்லும் பேருந்துகளும் சரிசமமாக 7 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்குள் வெவ்வேறு தடங்களில் இயக்கப்படும் பிஆர்டிசி பேருந்துகளில் டைமிங் பிரச்சினை இருந்து வருகிறது. இதையும் சரி செய்து தருவதாக தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதன் மூலம் இருமாநில போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே இருந்த சங்கடங்கள் தீர்த்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீண்ட கால கோரிக்கையை சுமூகமாக முடித்து வைக்க ஆவண செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT