Published : 30 Dec 2021 08:13 AM
Last Updated : 30 Dec 2021 08:13 AM
உண்மையான ஹேலோகிராம் மதுபாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ளதா என்று புதுச்சேரி மதுபான கிடங்குகள், மதுபான ஆலைகள், மதுபான கடைகளில் கலால் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த விற்பனை மதுபான கடைகள் உள்ளன.
புத்தாண்டையொட்டி மதுபானகடைகளில் உள்ள இருப்பு மற்றும்அரசின் முத்திரையிட்ட ஹேலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தலைமையில் கலால்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அண்ணாசாலையில் உள்ள மதுபான கடைகளில் இந்த ஆய்வு தொடங்கியது. மதுபானங்களில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். மேலும் கடைகளின் மதுபான இருப்பு எவ்வளவு என்ற விவரத்தையும் கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் கூறியதாவது:
புதுவையில் 350க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. கலால்வரி உட்பட பல்வேறு வரிகள் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டு மதுபானங்கள் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. புதுவையில் உள்ள மதுபான ஆலையாக இருந்தாலும், வெளிமாநில ஆலைகளாக இருந்தாலும் வரி பெறப்பட்டு, கலால்துறை அனுமதியளித்த பின்னரேமதுபானங்கள் கொள்முதல் செய்யப் படுகிறது. பாட்டில்களில் ஹேலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டியி ருக்கவேண்டும். கலால்துறை அனுமதிப்படி மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறதா, அதில் உள்ள ஹேலோகிராம் கலால்துறை அளித்தவையா அல்லது போலியானவையா என ஆய்வு நடத்தி வருகிறோம்.
அரசுக்கு வருவாய் இழப்பு இல்லாமல் வரி செலுத்தி மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறதா என சோதனை நடத்துகிறோம்.
வரி இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டால் மதுபானக் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஹேலோகிராமில் அரசு சின்னமான ஆயி மண்டபம் மற்றும் பறவை பறப்பது போன்ற சின்னம் இருக்கும்.
போலி மதுபானங்கள் விற்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ. 700 கோடி வருவாய் கலால்துறை மூலம் அரசுக்கு கிடைத்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் வருவாய் ரூ. 1,000 கோடியாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT