Published : 29 Dec 2021 07:05 AM
Last Updated : 29 Dec 2021 07:05 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி வலியுறுத்தல்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி சார்பில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள், பெண்களுக்கு கனிமொழி எம்பி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் போட்டியிட மாவட்ட செயலாளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள், பெண்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது.

இதில், திமுக மகளிரணி செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி பங்கேற்று, கல்வி உதவித் தொகை, புத்தகப் பைகள் மற்றும்தையல் இயந்திரம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை 500 பேருக்கு வழங்கினார்‌.

இந்நிகழ்வில், பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதி, மகளிரணி துணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கோவிந்தம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், கனிமொழி எம்பி பேசியதாவது: பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கான முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தற்போது திமுகஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுபஸ்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதால், ஆண்கள் தயங்காமல் பெண்களை பணிக்கு அனுப்புகின்றனர். இதனால், பெண்களின் சுதந்திரம் காக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய திமுக ஆட்சியில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து, தைரியமாக புகார் அளிக்க முன் வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் புகார் அளிக்க பெண்கள் பயந்ததால் வழக்குகள் குறைவாக பதிவாகின.

திமுகவில் உழைக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாவட்ட செயலாளர்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறும்போது, "காங்கிரஸ், பாஜகவை தவிர்த்து 3-வது அணியை உருவாக்கும் மம்தா பானர்ஜி முடிவு தேர்தலுக்குப் பிறகுதான் உறுதி செய்யப்படும். திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x