Published : 23 Dec 2021 08:42 AM
Last Updated : 23 Dec 2021 08:42 AM
நாட்றாம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லுாரி மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது எனக்கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் புதுப்பேட்டை அடுத்த முத்தா கவுண்டனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம் (52). இவரது மகன் விஷ்வா(18). இவர், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், தனது வீட்டில் மேல்நிலை நீர் தொட்டியில் தண்ணீர் இறைக்க மின்மோட்டாரின் ஸ்விட்சை நேற்று காலை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் துாக்கி வீசப்பட்ட விஷ்வாமயங்கினார். உடனே, விஷ்வாவை அவரது குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், நாட்றம்பள்ளி காவல் துறையினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விஷ்வா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். ஆனால், விஷ்வா உடலை பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது எனக்கூறிய அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்துார் அரசு மருத்துவமனை முன்பாக தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் காவலர்கள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில்,விஷ்வா உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல் அப்படியே வழங்க வேண்டும் எனக்கூறி உறவினர்கள், காவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும், உயிரிழந்த விஷ்வா உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல் வழங்க முடியாது என காவல் துறையினர் திட்டவட்டமாக கூறினர். பின்னர், போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு, விஷ்வா உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத் தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT