Published : 22 Dec 2021 07:18 AM
Last Updated : 22 Dec 2021 07:18 AM
முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டப் பயனாளிக்கானகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறுபவர்கள் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் பெறுவதற்காக தமிழக அரசால் 2009-ல் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற காப்பீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் 2012 ஜனவரி 11-ம்தேதி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் பயனாளியாகச் சேர்க்கப்பட்டன. இந்த திட்டத்துடன் பிரதான் மந்திரிஜன் ஆரோக்யா யோஜனா என்றதிட்டத்தை ஒருங்கிணைத்து, முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு தளங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் கருத்துருவின் அடிப்படையில், இந்த திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தலாம் என்று தமிழக சுகாதாரத் திட்ட இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
இதை பரிசீலனை செய்து, 2022 ஜனவரி 11-ம் தேதி முதல் புதிதாக நீட்டிக்கப்பட உள்ள முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜன.11 முதல் புதிதாக நீட்டிக்கப்பட உள்ள முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT