Published : 21 Dec 2021 10:23 AM
Last Updated : 21 Dec 2021 10:23 AM
மூலப்பொருட்கள் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி நேற்று நடைபெற்ற ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் 80 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.
இரும்பு, அலுமினியம், தாமிரம், பேக்கிங் காகிதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அகில இந்திய கூட்டமைப்பு (ஏஐசிஏ) விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் நேற்று உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
சுந்தராபுரம் சிட்கோ, குறிச்சி தொழிற்பேட்டைகள், போத்தனூர், கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப் பட்டன.
கோவையில் தொழில் நிறுவனங்களின் போராட்டம் குறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “நாடு முழுவதும் 10 லட்சம் தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்றதால், ஒரேநாளில் ரூ.25 ஆயிரம் கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் ரூ.1500 கோடி வரை உற்பத்தி பாதிப்பும், 3 லட்சம் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் எங்களது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.
ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு, தென்னிந்திய பொறியியில் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வி.கார்த்திக், இந்தியத் தொழில் வர்த்தக சபை(கோவை கிளை) தலைவர் பாலசுப்ரமணியம், வெட்கிரைண்டர் உற்பத்தியாளர் கள் சங்க தலைவர் சவுந்தரகுமார், டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ், ரயில்வே பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுருளிவேல், காட்மா சங்க தலைவர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக் கான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மூலப் பொருட்களின் விலை உயர்வால் ஒப்பந்தம்எடுத்து பணி ஆணை பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெருமளவு நஷ்டத்தைசந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு தொடருமா னால் லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வாதாரம் மிகவும்பாதிக்கப்படும்.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT