Published : 19 Dec 2021 07:21 AM
Last Updated : 19 Dec 2021 07:21 AM

ஃபாக்ஸ்கான் ஆலையின் 8 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வதந்தி பரவியதால் பல ஆயிரம் பெண் ஊழியர்கள் 16 மணி நேரம் சாலை மறியல்: சென்னை - பெங்களூரு உட்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்ட ஏராளமான பெண் தொழிலாளர்கள்.

சுங்குவார்சத்திரம்

ஃபாக்ஸ்கான் ஆலையின் விடுதியில் தரமற்ற உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 159 பேரில் 8 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வதந்திபரவியதால், பெண் தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

யில் 16 மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடந்ததால், பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அடுத்த ஜமீன் கொரட்டூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். தனியார் கப்பல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அந்த மாணவர் விடுதியை, ஃபாக்ஸ்கான் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளது. கடந்த14-ம் தேதி இரவு அந்த விடுதியில் உணவு அருந்திய 159 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 155 பேர் சிகிச்சைக்கு பிறகுவீடு திரும்பினர். 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களும் தேறி வருகின்றனர்.

இந்நிலையில், 8 பெண் தொழிலாளர்கள் உடல்நிலை மோசமாகி,உயிரிழந்துவிட்டதாக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் கோபம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிஅளவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சென்னை - பெங்களூரு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பெண் தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான போலீஸார் எடுத்துக் கூறி, சாலையில் ஒரு பக்கத்தில் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உயிரிழந்ததாக கூறப்பட்ட 2 பெண் தொழிலாளர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இதற்கிடையில், புளியம்பாக்கம், கோலிவாக்கம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம் - தாம்பரம், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - செய்யாறு சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று திரும்பியவர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதற்கிடையில், திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் தனியார் கல்லூரி வளாக விடுதியில் தங்கியுள்ள 500பெண் ஊழியர்கள் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருவள்ளூர் கோட்டாட்சியர் எம்.ரமேஷ், வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், டிஎஸ்பி சந்திரதாசன் பேச்சுவார்த்தை நடத்தினர்.8 பெண் தொழிலாளர்களும் பத்திரமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியதால், மறியலை கைவிட்டனர்.

சுங்குவார்சத்திரத்தில் மட்டும் போராட்டம் முடிவுக்கு வராததால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஊரக, தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 16 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வந்தபெண் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பிறகு, தொழிலாளர் நலத் துறைஅமைச்சர் சி.வி.கணேசன் கூறும்போது, ‘‘பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய விடுதி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விடுதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்படும். இந்நிறுவன ஊழியர்களுக்கு ஒரு வாரம் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளுக்கு பத்திரமாக செல்ல போக்குவரத்து வசதி செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x