Published : 18 Dec 2021 12:18 PM
Last Updated : 18 Dec 2021 12:18 PM

திமுக அரசு செய்யும் தவறுகளை தொடர்ந்து தட்டிக் கேட்போம்: கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவையில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை

திமுக அரசு செய்யும் தவறுகளை தொடர்ந்து தட்டிக் கேட்போம் என, கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரிகளை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக அரசையும், கோவை மாநகராட்சி யையும் கண்டித்து, கோவை ஒருங் கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில், தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, கோவை புறநகர் வடக்குமாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: சட்டப் பேரவைத் தேர்தலின்போது, திமுகவினர் 525 வாக்குறுதிகளை அளித்தனர். அதில், ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு, முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளனர்.

ஆட்சி அமைத்த 7 மாதங்களில் திமுக அரசு மக்கள் எதிர்ப்பை மிகப்பெரிய அளவில் சந்தித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வாட் வரியை குறைக்க வேண்டும். அவற்றை குறைத்தால்தான் விலைவாசியும் குறையும். ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுகவினர் அறிவித்தனர். ஆனால் இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. கடந்த 7 மாத கால திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. கடந்த அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை மட்டும்தான் தற்போது வரை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டதுடன், சாலைகள் விரிவாக்கம் செய்யப் பட்டன. அதனால்தான் இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதனால் கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கோவையில் கட்டப்பஞ்சாயத்து வசூல், கந்துவட்டி பிரச்சினை இல்லை.

அதிமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிகின்றனர். இதற்கெல் லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். திமுக அரசு செய்யும் தவறுகளை தொடர்ந்து தட்டிக் கேட்போம்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.

கோவை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதைவிட பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x