Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM
இந்தியா - பாகிஸ்தான் போரின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னம் இன்று முதல் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து விடப்படுகிறது.
இதுகுறித்து, தென்பிராந்திய ராணுவ அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர்தொடுத்தது. டிச.3-ம் தேதி தொடங்கிய இப்போரில் டிச.16-ம் தேதிஇந்தியா வெற்றிவாகை சூடியது.அன்று நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
மேலும், அதே தினத்தில் போரில்பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்கள் 93 ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், டிச.16-ம் தேதியை ‘விஜய் திவாஸ்’ என்று இந்தியா கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு டிச.16-ம் தேதி (இன்று) போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னம், 16-ம் தேதி காலை 10 மணி முதல் 19-ம் தேதி மாலை 5 மணி வரை 4 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படும்.
இந்தப் போர் நினைவுச் சின்னத்தில், மலர்வளையம் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். அதேபோல், சென்னையில் உள்ள முப்படைகளின் தலைமை அதிகாரிகளும் மலர்வளையம் வைப்பார்கள். மேலும், இப்போரில்பங்கேற்றவர்கள் மற்றும் வீரர்களின்குடும்பத்தினர் சிறப்பிக்கப்படுவார் கள்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழக ஊடகங்கள் பொறுப்புடன் மிகச் சரியான வகையில் செய்தியை மக்களுக்கு உடனுக்குடன் அளித்ததற்கு நன்றி. இவ்வாறு அருண் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT