Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கொண்டு வரப்படுகிறது அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க புதிய மசோதா: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை

அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட மசோதா, வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் அரசு தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அண்மையில் தலைமைச் செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அந்த அறிக்கையில் உயர் நீதிமன்றம் கோரிய விவரங்கள் எதுவும் இல்லை. சம்பிரதாயத்துக்காக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தலைமைச் செயலர் டிச.16-ம் தேதி நேரில் ஆஜராகிவிரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தலைமை செயலர் ஆஜராக விலக்கு

இந்நிலையில், தலைமைச் செயலர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையும், சிடி-யும் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தலைமைச் செயலர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும் கோரப்பட்டது. இதை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு ஏற்றுக்கொண்டு, தலைமைச் செயலர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019-ம்ஆண்டு ஜனவரியில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தில் அனைத்து நீர்நிலைகளின் விவரங்களும் தாலுகா வாரியாக பதிவிடப்பட்டுள்ளது.

47,707 ஏக்கர் ஆக்கிரமிப்பு

டிச.8-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நீர்நிலைகளின்ஆக்கிரமிப்பு குறித்த பட்டியலை போர்க்கால அடிப்படையில் தயாரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் தமிழகம் முழுவதும்உள்ள நீர் நிலைகளில் 47,707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 4,862 அரசு கட்டிடங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளன.

நீர்நிலைகளை நேரடியாக அளவீடு செய்வதற்கு 12 மாத அவகாசம் தேவைப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும்ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்படி அகற்றப்படுகிறது. இந்நிலையில், அனைத்து நீர்நிலைகளையும் இந்த சட்டத்தின்கீழ் கொண்டு வரும்வகையில் புதிய சட்ட மசோதா, வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும்.

மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x