Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

தங்கம், வெள்ளி நகைகளில் ஹால்மார்க் மோசடி - புகார் மீது உடனடி நடவடிக்கை: இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவிப்பு

சென்னை

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால்மார்க் மோசடி குறித்து நுகர்வோர் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) தெரிவித்துள்ளது.

தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்க நகைகள், கலைப்பொருட்களின் தூய்மை, நேர்த்தித் தன்மை ஆகியவை இந்திய தர நிர்ணய அமைவனத்தால் (பிஐஎஸ்) அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன. அதன் பிறகே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

இதற்கிடையே, சில சட்டவிரோத நகை விற்பனையாளர்கள்மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களில், வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் தரத்தில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன.

அண்மையில், வாடிக்கையாளர் ஒருவர், புகழ்பெற்ற நகைக் கடையில் வெள்ளி தட்டுகள் மற்றும் டம்ளரை வாங்கியுள்ளார். அப்பொருட்களின் தூய்மையை சந்தேகித்த வாடிக்கையாளர், ஹால்மார்க்கிங் மையத்தில் அப்பொருட்களை சோதித்து, தூய்மை சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளார்.

ஹால்மார்க்கிங் மையம் சான்றிதழை வழங்க மறுத்தது. இதனால்சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர் இதுகுறித்து பிஐஎஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.இப் புகாரின் மீது பிஐஎஸ் உடனடியாக விசாரணை நடத்தி, ஹால்மார்க்கிங் மையத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது.

எனவே, நுகர்வோருக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால்,உடனடியாக, அருகிலுள்ள பிஐஎஸ் கிளை அலுவலகத்துக்குச் சென்றோ, அல்லது sro@bis.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரியிலோ, www.bis.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 22541442, 22541584 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இத் தகவல், இந்திய தர நிர்ணயஅமைவனத்தின் தெற்கு மண்டலநுகர்வோர் விவகாரம், வணிகப்பிரிவு துணை இயக்குநர் எச்.அஜய்கண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x