Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

`சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின்கீழ் சாலை பெயர்ப் பலகைகளில் வரலாற்று சின்னங்களின் புகைப்படங்கள்

சென்னை

சென்னையில் சாலை பெயர்ப் பலகைகளில் வரலாற்று சின்னங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

`சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின்கீழ் சென்னையில் பசுமை சென்னை, நலமிகு சென்னை, கல்வியியல் சென்னை, தூய்மை சென்னை, எழில்மிகு சென்னை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

தூய்மை சென்னை திட்டத்தின் கீழ், குப்பை மற்றும் கழிவுகளை உயிரியல் முறையில் அகழ்ந்தெடுத்தல், உர மையங்களை வலுப்படுத்துதல், கட்டிடம் மற்றும் இடிபாடுக் கழிவுகள் நவீன முறையில் அகற்றுதல், குடிசைப் பகுதிகளில் தேங்கும் குப்பை, கழிவுகளை அகற்றுதல், இறைச்சிக் கூடங்கள், வணிக வளாகங்களை நவீனமயமாக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பசுமை சென்னை திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களை சீரமைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக மாற்றுதல், எழில்மிகு சென்னையின் கீழ், பாரம்பரியக் கட்டிடங்களை சீரமைத்தல், பாலங்களின் கீழ்பகுதிகள், சாலை மையத் தடுப்புகளை அழகுபடுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் நடைபாதைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நலமிகு சென்னையின் கீழ், பொதுக் கழிப்பறைகள் அமைத்தல், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்தல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்தல், மோட்டார் அல்லாத வாகனப் போக்குவரத்தை ஊக்குவித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 2021-22ம் நிதியாண்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ், சாலைகளில் வரலாற்றுச் சின்னங்களின் புகைப்படங்கள் அடங்கிய பெயர்ப் பலகைகளை வைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ``ரூ.10 கோடி மதிப்பில், முக்கிய சாலைகளில் உள்ள 5,000 பெயர்ப் பலகைகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. புதிய பெயர்ப் பலகைகளில் வள்ளுவர் கோட்டம், தலைமை செயலகம், பார்த்தசாரதி கோயில், சாந்தோம் தேவாலயம், பாரதியார் இல்லம், மெரினா கடற்கரை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன. முதல்கட்டமாக 100-க்கும் மேற்பட்ட பெயர்ப் பலகைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x