Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

கட்டிட அனுமதியின் செல்லத்தக்க காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும்; 60 நாளில் கட்டிட அனுமதி வழங்க விரைவில் ஒற்றைச்சாளர முறை: சென்னையில் நடந்த கிரெடாய் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

‘கிரெடாய்’ அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் ‘ஸ்டேட்கான்’ என்ற 2 நாள் மாநாடு மற்றும் கண்காட்சியை சென்னையில் நேற்று தொடங்கி வைத்துப் பேசுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, அத்துறையின் செயலர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, ‘கிரெடாய்’ அமைப்பின் துணைத் தலைவர் ஜி.ராம் ரெட்டி, ‘கிரெடாய்’ தமிழகத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, துணைத் தலைவர் எம்.ஆனந்த், பொருளாளர் பி.வி.சண்முகம் உள்ளிட்டோர்.

சென்னை

தமிழகத்தில் விரைவாக கட்டிடங்கள் கட்ட, மனைப் பிரிவுகள், மனைகளுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் வகையில் விரைவில் ஒற்றைச்சாளர முறை அறிமுகம் செய்யப்படும் என்று ‘கிரெடாய்’ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பான ‘கிரெடாய்’ அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் ‘ஸ்டேட்கான்’ என்ற2 நாள் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதில்முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாடு, கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் மொத்த உற்பத்தி வருவாயில் இது 18.3 சதவீதம் பங்களிக்கிறது. வீடு, நிலம் பதிவு மூலம் கடந்த செப்டம்பரில் மட்டும் அரசுக்கு ரூ.5,973 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கட்டுமானத் திட்டங்கள் அதிகரிப்பு

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த நவம்பர் வரை பதிவு செய்யப்பட்ட புதிய கட்டுமானத் திட்டங்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தொழிற்சாலைகள், சேமிப்புகிடங்குகளுக்கு தேவையான கட்டுமானங்களும் உயர்ந்து, 3-வது காலாண்டில் அந்தபணிகளுக்கு 44 லட்சம் சதுர அடி இடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைவிட 2 மடங்கு அதிகம்.

தொழில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், கட்டுமானத் தொழிலை ஊக்கப்படுத்தவும் அரசு பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. விரைவாக கட்டிடங்கள் கட்ட, மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் வகையில் ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். ஒப்புதல் மற்றும் நிகர் ஒப்புதல் போன்றவை கட்டுமான விண்ணப்பதாரர் அளிக்கும் சுயசான்றிதழ் அடிப்படையில் அமைந்திருக்கும். மாநிலத்தில் சீரான நகர்ப்புற வளர்ச்சிக்காக 12 மண்டலத் திட்டங்கள்தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கோவை, நீலகிரி, மதுரை ஆகிய 3 மண்டலங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற 9 மண்டலங்களுக்கும் விரைவில்திட்டங்கள் தயாரிக்கப்படும்.

நகர்ப்புற பகுதிகள், வளர்ச்சி மையங்கள் சீரான வளர்ச்சி அடைவதை உறுதிசெய்ய, கோவை, திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டதுபோல, மதுரை, ஓசூருக்கும் விரைவில் ஏற்படுத்தப்படும்.

மாறிவரும் தொழில்நுட்பம், நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப, கட்டுமானத் தொழிலை எளிமைப்படுத்த, பழைய சட்டங்களை மறுஆய்வு செய்ய அரசு தயாராக உள்ளது. தற்போதைய வளர்ச்சிக்கேற்ப நகர ஊரமைப்புசட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்டிட வரைபட அனுமதியின் செல்லத்தக்க காலத்தை, 5 ஆண்டில் இருந்து 8 ஆண்டாக உயர்த்த விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

சென்னை நகரின் 2026-2046 ஆண்டுகளுக்கான 3-வது பெருந்திட்டம் தயாராகி வருகிறது. இதில், வெள்ளம், நகர பரவலாக்கம், போக்குவரத்து இடையூறுகள், தேவையான அளவு வீடுகள் இல்லாத நிலை என்பதுபோல, சென்னை சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு இதில் தீர்வு காணப்படும்.

கோயம்பேடு மொத்த வியாபார மையம், பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட் போன்றவற்றை சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமம் நிர்வகித்து வருகிறது. இந்த கட்டமைப்புகளை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றதிட்டமிட்டுள்ளோம். கிளாம்பாக்கம், குட்டம்பாக்கம் பேருந்து நிலையங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். பட்டினப்பாக்கத்தில் உலகத் தரத்திலான மிகப் பெரிய தொழில் வணிக மையம் அமைக்கும் பணி தனியார் பங்களிப்புடன் விரைவில் தொடங்கப்படும்.

குடிசைகள் இல்லாத மாநிலம்

2031-ல் தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற, அடுத்த 10 ஆண்டுகளில் 9.53 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை ரூ.31,179 கோடியில் 6.2 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

நடுத்தர, ஏழை, எளிய மக்களின் விருப்பங்களையும் நிறைவு செய்வதாக கட்டுமான நிறுவனங்களின் திட்டமிடுதல்கள் அமையவேண்டும். பெரிய கட்டிடங்கள், பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளோடு, நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்கான வீடுகள், வாழ்விடங்களையும் உருவாக்கி தரவேண்டும். இதற்கு அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறது. தனியார் துறையினரும் சேவைமனப்பான்மையோடு நடுத்தர வர்க்கத்தினருக்கான குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

இக்கூட்டத்தில் ‘கிரெடாய்’ அமைப்பின் தமிழக தலைவர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது, ‘‘அண்டை மாநிலங்களில் முத்திரை, பதிவுக் கட்டணம் 5-6 சதவீதம்தான் உள்ளது. தமிழகத்தில் 11 சதவீதமாக உள்ளதை குறைக்க வேண்டும். இதைக் குறைத்தால் பதிவு எண்ணிக்கை அதிகரித்து, அரசின் வருவாயும் உயரும்’’ என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதி துறை செயலர் ஹித்தேஷ்குமார் மக்வானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x