Published : 13 Dec 2021 05:21 PM
Last Updated : 13 Dec 2021 05:21 PM
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.1,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பெரியமலை மீது அருள்மிகு அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோயிலுக்கு மலையில் உள்ள 1,305 படிக்கட்டுகளில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது,ரோப் கார் வசதி அமையும் இடத்தில் பக்தர்களின் வசதிக்காக முதல் கட்டமாக ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (டிச.13) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் திட்ட விளக்கவுரை ஆற்றினார். சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, ‘‘கடந்த காலங்களில் ஒரு சம்பிரதாயத்திற்காக இருந்த இந்து சமய அறநிலையத்துறையை முதல்வர் ஸ்டாலின் மாற்றியமைத்துள்ளார். கடந்த 7 மாதங்களில் 551 கோயில் திருப்பணிகளுக்கு உத்தரவிட்டதுடன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் துறையாக மாற்றியுள்ளார். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.1,600 கோடி மதிப்புள்ள இறைவனின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 47 கோயில்களின் வளர்ச்சிக்காக ஒரு வரைவு திட்டத்தை தயாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோயில்கள் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியை முதல்வர் ஸ்டாலின் 5 ஆண்டுகளுக்குள் செய்வார். மன்னர்கள் ஆண்ட காலத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று வரலாற்றில் நிச்சயம் உருவாக்கப்படும்.
சோளிங்கர் சின்னமலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழா கடைசியாக 1967ஆம் ஆண்டு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் முதல்வரின் அனுமதியுடன் சின்னமலை ஆஞ்சநேயர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக என்னை நியமித்தார்கள். அப்போது, கோயில் கோபுரத்துக்குத் தங்க முலாம் பூச நடவடிக்கை எடுத்து நன்கொடையாளர்கள் உதவியுடன் செயல்படுத்தினோம். அதன் பிறகு வந்த ஆட்சியர்கள் கோயிலுக்கு எந்த வளர்ச்சிப் பணியையும் செய்யவில்லை. இப்போது திமுக ஆட்சி மீண்டும் வந்துள்ளது. கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் நடைபெறும். இங்கு தங்கும் விடுதிகள், பூங்காக்கள், வாகனம் நிறுத்துமிடம், குடிநீர் வசதிகள் 6 மாதங்களுக்குள் ஏற்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
பக்தர்களுடன் தரிசனம்
முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த அமைச்சர் சேகர் பாபு, பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மர் கோயில் சுவாமியை தரிசனம் செய்யச் சென்றார். அப்போது, கோயிலில் அமைச்சர் வருகைக்காக பக்தர்கள் சிறிது நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த அமைச்சர் சேகர் பாபு, பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கக் கூறியதுடன் ஒரு குடும்பத்தினரைத் தன்னுடன் அழைத்துச் சென்று சுவாமிக்கு அருகில் அவர்களை நிற்க வைத்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். தொடர்ந்து சின்னமலை மீது அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் அமைச்சர் சேகர் பாபு சென்று தரிசனம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT