Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என பொய்யாக விளம்பரப்படுத்தப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள 593 மருத்துவக் கல்லூரிகளில், 69 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. மொத்தமுள்ள 45,598மருத்துவ படிப்புக்கான இடங்களில், தமிழகத்தில் 10,375 இடங்கள் உள்ளன. இதேபோல, நாடு முழுவதும் உள்ள 312 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 22,933 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 5,125 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால்தான், தமிழகத்தில் மருத்துவத் துறை வளர்ச்சி பெற்றது. 1954 வரை தமிழகத்தில் 8 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. எம்ஜிஆர் ஆட்சியில் கடலூர், சேலம் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன.
பின்னர் ஜெயலலிதா ஆட்சியில், ஈரோடு, கன்னியாகுமரி, தேனி,வேலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இது தவிர மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில், 2019-ல் மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய கல்லூரிக்கான கட்டமைப்பை அதிமுக அரசு ஏற்படுத்தியது.
இதன் காரணமாக ஒவ்வொரு கல்லூரியிலும் 150 என, மொத்தம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 3,000 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால்தான் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் என்று பொய்யாக விளம்பரப்படுத்துகிறார்கள்.
அதிமுகவின் சாதனையை, திமுகவின் சாதனைபோல காட்டிக் கொள்வது கடும் கண்டனத்துக்குரியது. ஆட்சிக்கு வந்து 6 மாதமே ஆன நிலையில், இத்தனை மருத்துவ இடங்களை உருவாக்க முடியுமா என்பதை மக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். எனவே, இனியாவது உண்மையை முன்னிறுத்தி திமுகவினர் செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் சாதனையை, திமுகவின் சாதனைபோல காட்டிக் கொள்வது கடும் கண்டனத்துக்குரியது. ஆட்சிக்கு வந்து 6 மாதமே ஆன நிலையில், இத்தனை மருத்துவ இடங்களை உருவாக்க முடியுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT