Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

மக்கள் தேவையறிந்து நல்லாட்சி தரும் முதல்வர் ஸ்டாலின்: சேலம் அரசு விழாவில் பாமக எம்எல்ஏக்கள் புகழாரம்

சேலம்

மக்கள் தேவையறிந்து முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி புரிந்து வருவதாக சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பாமகவைச் சேர்ந்த மேட்டூர், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முன்னதாக விழாவில், பாமகவைச் சேர்ந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் பேசியது:

‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு’ என்ற வரிகளுக்கு ஏற்ப முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கும் துண்டு சீட்டுக்கும் உயிர் இருக்கும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். அமைச்சர் நேரு பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்கினார். ஒரு மூதாட்டி துண்டு சீட்டில் முதியோர் உதவி தொகை கேட்டு எழுதி கொடுத்திருந்தார். இன்று அவருக்கு உதவி தொகை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

துண்டு சீட்டில் மனு கொடுத்தால் கூட, அதற்கு முதல்வர் உயிர் கொடுத்துள்ளதை நன்றியோடு பார்க்கிறேன். பசுமை காவலனாக இருந்து மலைகளை பாதுகாப்பதுடன், மலைகுன்று இடுக்குகளில் தோட்டம் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பது வரவேற்புக்குரியது. நவகிரகங்களுக்கு எத்தனயோ முகம் உள்ளது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எத்தனை முகங்கள் இருக்கிறது என்பதே தெரியவில்லை. ஏனென்றால், ஒரு நாள் சென்னை, மறுநாள் கோவை, அதற்கு அடுத்த நாள் சேலம் என தேனீ போன்று சுறுசுறுப்புடன் சுழன்று மாவட்டம் தோறும் சென்று 200 நாட்கள் பணிபுரிந்து வரும் முதல்வரை பாராட்டி நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை. எனவே, சேலத்தில் சக்தி வாய்ந்த வெண்ணங்கொடி முனியப்பன் அருளாளே, முதல்வர் ஸ்டாலின் 100 ஆண்டுகள் கடந்து செயலாற்றிட வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு தேவையான திட்டப்பணிகளை மனுவாக எழுதி கொடுக்கிறேன். அதனை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பாமகவைச் சேர்ந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும், அவரது பணிகள் பாராட்டுக்குரியதாக உள்ளது. முதல்வரை யார் வேண்டுமானாலும் எளிதில் அணுகுபவராக இருந்து வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க அவர் அலுவலகத்தில் காத்திருந்தேன். சில நொடிகளில் என்னை அழைத்து, தேவையை கேட்டார்.

மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி கொடுக்க கேட்டேன். அதனை நிறைவேற்றி கொடுப்பதாக உறுதி அளித்தார். அதன்படி, மேட்டூர் உபரிநீர் திறந்து விட கேட்டதும், அதற்கு செவி சாய்த்து நடவடிக்கை எடுத்தார். இதனால், 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கான நடவடிக்கையை உடனுக்குடன் முதல்வர் ஸ்டாலின் எடுத்து, நல்லாட்சி புரிந்து வருகிறார். அவர் நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சேலத்தில் அரசு துறை சார்பில் நடந்த விழாவில் பாமக எம்எல்ஏக்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதை கண்டு, திமுக தொண்டர்கள் பெருமிதம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x