Published : 11 Dec 2021 03:08 AM
Last Updated : 11 Dec 2021 03:08 AM
தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 1.77 கோடிமரக்கன்றுகளை உருவாக்க ரூ.38.80 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31,194சதுர கிமீ பரப்பளவு (மொத்த பரப்பில் 23.98 சதவீதம்) மட்டுமே பசுமை போர்வை உள்ளது.
1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக் கொள்கையின்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம், அதாவது தமிழகத்தில் 42,919 சதுர கி.மீ. பரப்பில்பசுமை போர்வை இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட தமிழகம் மேலும் 13,500 சதுர கி.மீ. பரப்பளவு (மொத்த பரப்பில் 9 சதவீதம்) பசுமை போர்வையை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த இலக்கை அடுத்த 10 ஆண்டுகளில் எட்டுவதற்காக பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என்று நடப்பாண்டு மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதற்கான நிர்வாக அனுமதி மற்றும் ரூ.38.80 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹூ கடந்த 9-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.
“இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி உள்நாட்டு வகையை சேர்ந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காக 2021-22நிதியாண்டில் 5,000 ஹெக்டேர்பரப்பில் 47 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க ரூ.21 கோடி,2022-23 நிதியாண்டில் 1.30 கோடிமரக்கன்றுகளை உருவாக்க ரூ.17.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT