Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM

பாரம்பரிய, நவீன மருத்துவங்களை இணைக்க வேண்டும்: ஸ்ரீ இராமச்சந்திரா பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் உரை

போரூர்,  இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.

சென்னை

ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 98 தங்கப் பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் படிப்பில் எஸ்.குஹா ப்ரீதா என்ற மாணவி 4 தங்கப்பதக்கங்களைப் பெற்றார்.

அவர் மாணவர்களிடையே உரையாற்றும்போது, “மக்களுக்கு முழுமையான மருத்துவ சேவையை வழங்க இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய நவீன அலோபதி முறையுடன் இணைக்க வேண்டும். இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை முறைகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவை அனைத்தும் அர்த்தமற்றவை என்று கூற முடியாது.

அம்மை நோய்க்கு தடுப்பூசி

பிரிட்டனில் 1767-ல் வெளிவந்த ஓர் அறிக்கையில், இந்தியாவில் அம்மை நோய்க்கு தடுப்பூசி பயன்பாட்டில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தை நாம் புறக்கணிக்க முடியாது என்பதை இதன்மூலம் உணரலாம்.

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையும் இந்த இரு மருத்துவ முறைகளையும் இணைக்க முற்படுகிறது. இனிவரும் இந்தியா வின் கல்வி அணுகுமுறை அப்படித்தான் இருக்க வேண்டும். பட்டம் பெறும் இளம் மாணவர்கள் சிகிச்சையை வியாபாரமாக்க முனையக் கூடாது” என்றார்.

வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் பட்டங்களை வழங்கி முனைவர் மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

துணைவேந்தர் பி.வி.விஜயராகவன் ஆண்டறிக்கை வாசிக்கும்போது, “இந்த கல்வியாண்டில் 11 புதிய பட்டப் படிப்புகள், 6 பட்டமேற்படிப்புகள் அறிமுகப்படுத் தப்பட்டு, கூடுதலாக 2,346 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு 1,801 பேர்பட்டம் பெறுகின்றனர். பல பன்னாட்டு மற்றும் தேசிய பல்கலைக்கழகங்களுடன் 17 புரிந்துணர்வுஒப்பந்தங்கள் செய்துகொள்ளப் பட்டுள்ளன” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x