Published : 07 Dec 2021 04:12 PM
Last Updated : 07 Dec 2021 04:12 PM
ரூ.14.27 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணை அடிப்படையில் 15 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"முதல்வர் ஸ்டாலின் இன்று (7.12.2021) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் சென்னை, மதுரை, கடலூர், நெல்லை, வேலூர், தஞ்சை, திருச்சி ஆகிய பதிவு மண்டலங்களில் 14 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் விருத்தாசலம் - ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
பொதுமக்களின் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணப் பதிவுகள், வில்லங்கச் சான்று வழங்குதல், ஆவணத்தின் சான்றிட்ட நகல் வழங்குதல், பல்வேறு திருமணச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்தல் போன்ற முக்கியப் பணிகளை ஆற்றிவரும் சார்-பதிவாளர் அலுவலங்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் அளித்திடவும், பணியாளர்களின் பணியினை எளிமைப்படுத்தும் வகையிலும், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்டும் திட்டத்தினைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
சென்னை பதிவு மண்டலத்தில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் சேலையூர் சார்-பதிவாளர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம்; 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆலந்தூர் சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடம் மற்றும் 1 கோடியே 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலவாக்கம் சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
நெல்லை பதிவு மண்டலம் விக்கிரமசிங்கபுரம், வேலூர் பதிவு மண்டலம் – நெமிலி, தஞ்சாவூர் பதிவு மண்டலம் – மதுக்கூர், திருச்சி பதிவு மண்டலம் – இரும்புலிக்குறிச்சி, கடலூர் பதிவு மண்டலம் – சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா 1 கோடியே 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள்;
மதுரை பதிவு மண்டலத்தில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடமலைகுண்டு சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடம்; திருநெல்வேலி பதிவு மண்டலத்தில் 93 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
இதேபோல் வேலூர் பதிவு மண்டலத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள களம்பூர் சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடம்; கடலூர் பதிவு மண்டலத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விருத்தாசலம் ஒருங்கிணைந்த வளாகக் கட்டிடத்தில் கட்டப்பட்டுள்ள விருத்தாசலம் - ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 14 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சார்-பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் விருத்தாசலம் மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், பதிவுத்துறையின் மென்பொருளோடு பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்து வரி பெயர் விவரங்கள் அடங்கிய மென்பொருளும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தண்ணீர் வரி மென்பொருளும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் கட்டணம் செலுத்துவோர் விவர மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளன.
சார்-பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பரிவர்த்தனை நடக்கும்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கும் சொத்து வரி ரசீது, தண்ணீர் வரி ரசீது மற்றும் மின் கட்டண ரசீது தொடர்பான பெயர் மாற்ற விவரங்கள் தானாகவே இணைய வழியாக அனுப்ப ஏதுவாகும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் அமரத்துவம் அடைந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் 5 வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.”
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT