Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரி, குளங்கள், தனியார் பண்ணைக் குட்டைகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்கள் உற்பத்தி பெருமளவு சரிந்துள்ளது.
இந்த வளர்ப்பு மீன் உற்பத்தியை பெருக்க மீன்வளத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வளர்ப்போர் வலியுறுத்துகின்றனர்.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 கி.மீ. கடலும், 35 கிராமங்களும் உள்ளன. பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளோ கடலோர கிராமங்களோ இல்லை. ஆனாலும் மீன்வளத் துறை 2 மாவட்டங்களுக்கும் இணைந்தே செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் 5,394 மீனவ குடும்பங்களில், 8,691 மீனவர்களும் உள்ளனர். இவர்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 25,133 டன் கடல் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஓர் ஆண்டுக்கு முன் இந்த மீன் உற்பத்தி 34,761 டன்னாக உயர்ந்தது.
கடல் மீன்கள் உற்பத்தி உயர்ந்த நிலையில் நிலத்தில் உள்ள நீர் நிலைகளில் வளர்க்கப்படும் மீன்கள் உற்பத்தி பெருமளவு குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி, குளங்கள், பண்ணை குட்டைகளில் உற்பத்தி செய்யப்படும் மீன்கள் 12,497 டன்னாக இருந்தது. இது தற்போது 2,578 டன்னாக குறைந்துள்ளது. இது 79.36 சதவீதம் குறைவு ஆகும்.
இதுகுறித்து மீன் வளர்ப்போர் சிலரிடம் கேட்டபோது, ``மீன் வளர்ப்புக்கு அடிக்கடி தண்ணீர் மாற்ற வேண்டியுள்ளது. கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறையால் இது சிரமமாக உள்ளது.
விற்பனையில் சவால்
மேலும் கரோனா காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மீன்களை விற்பனை செய்வதில் பெரும் சவால் ஏற்பட்டது. கடல் மீன்களுக்கு உள்ள விற்பனை வாய்ப்புகள் வளர்ப்பு மீன்களுக்கு இல்லை. இதனால் மீன் வளர்ப்போர் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது.
வளர்ப்பு மீன்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் மீன்வளத் துறை, இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். குட்டை வெட்டுவதற்கு மானியம் வழங்குவதுடன், மீன் குஞ்சுகள், மீன் உணவுகளை இலவசமாக வழங்க வேண்டும். கோடை காலங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கிணறுகளை ஆழப்படுத்த கடனுதவிகளை ஏற்பாடு செய்வதுடன், விற்பனை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமாரிடம் கேட்டபோது, "மீன் உற்பத்தி குறைந்ததற்கு கரோனா பாதிப்புதான் முக்கிய காரணம். மீன்களை விற்பனை செய்வது, வெளியிடங்களுக்கு அனுப்புவது போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதனால் மீன் வளர்ப்போர் தயக்கம் காட்டினர். மீண்டும் ஏரி, குளங்கள், பண்ணைக் குட்டைகளில் வளர்க்கப்படும் மீன்களின் உற்பத்தியை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT