Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை முதல்வர் ஆய்வு

தூத்துக்குடியில் மழைநீர் வடியாமல் இருக்கும் முத்தம்மாள் காலனியில் ஆய்வுசெய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டு, மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன், தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர்.படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். ‘‘மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், தூத்துக்குடி மாநகரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் 7 நாட்களுக்கு மேலாக வடியாமல் தேங்கி நிற்கிறது. மாநகரில் பிரையண்ட் நகர், சிதம்பரநகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், ஆதிபராசக்தி நகர், அம்பேத்கர் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனசேகரன் நகர், கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக் கோரி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்வர் வருகை

தூத்துக்குடி நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். மதியம் 1.45 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வரை, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். மதிய உணவை விமான நிலையத்திலேயே முடித்துக் கொண்ட முதல்வர், பிற்பகல் 2.30 மணியளவில் புறப்பட்டு, 2.52 மணிக்கு பிரையண்ட் நகர் வந்தார். அங்கு முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீரில் இறங்கி ஆய்வு செய்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அங்கிருந்து, மாநகராட்சி அலுவலகம் வந்த முதல்வர், மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுஉள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். நிவாரணபணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

3,000 பேருக்கு நிவாரணம்

பின்னர், தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் வெள்ளம் தேங்கியுள்ள பகுதியை பார்வையிட்டார். எட்டயபுரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரில் சிறிது தூரம் நடந்து சென்று, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

முதல்வரிடம், பொதுமக்கள் கூறும்போது ‘‘மழைக் காலங்களில் பல நாட்கள் வீடுகளைச் சூழ்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு மழைக் காலத்திலாவது இந்த கஷ்டத்தை நாங்கள் அனுபவிக்காமல் தடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

“மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.

செல்ஃபியை தவிர்த்த முதல்வர்

பிரையண்ட் நகர் பகுதியில் ஒரு பெண் முதல்வர் அருகே வந்து செல்ஃபி எடுக்க முயன்றார். அவரை முதல்வர் தடுத்து, இந்த சூழ்நிலையில் செல்ஃபி வேண்டாம் என மறுத்துவிட்டார். ஆய்வு செய்த அனைத்து இடங்களிலும் நின்றிருந்த குழந்தைகளை பாசத்தோடு தமது அருகே அழைத்து, நலம் விசாரித்தார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் செ.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (வைகுண்டம்), தொழில் துறை ஆணையர் மற்றும் இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாலை 3 மணியளவில் ஆய்வை தொடங்கிய முதல்வர், சுமார் 2 மணி நேரம் பாதிப்பை பார்வையிட்டார். மாலை 5 மணியளவில் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x