Published : 25 Nov 2021 06:05 PM
Last Updated : 25 Nov 2021 06:05 PM

மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர்: எம்.பி .ஜோதிமணி

கரூர்

கரூர் ஆட்சியரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி. செ.ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தரையில் அமர்ந்து விளக்கமளித்தார். இருந்தாலும் சமாதானமடையாத எம்.பி. செ.ஜோதிமணி 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தை தொடர்ந்தார்.

கரூர் எம்.பி. செ.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு இன்று (நவ. 25ம் தேதி) மதியம் 12.15 மணிபோல வந்தார். அப்போது மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தரைத்தளத்திற்கு வந்து எம்.பி. ஜோதிமணி அவரது அறைக்கு அழைத்தார்.

அவர் வர மறுக்கவே ஆட்சியர் த.பிரபுசங்கர் தரையில் அமர்ந்து எம்.பி. செ.ஜோதிமணியிடம் கேட்டபோது, ”எம்.பி. செ.ஜோதிமணி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை தயாரித்து வழங்குகிறது. எனவே மத்திய அரசின் நிதியை பயன்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்களை நடத்தும்போது அலிம்கோ நிறுவனத்தை இணைத்து அவர்களுக்கு தே¬வான உதவிகளை பெற்று தரவேண்டும் என 3 முறை கடிதம் அனுப்பியும் மாவட்ட ஆட்சியர் முகாம்களை நடத்தவில்லை” என்றார்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர் ”மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் தேவைப்படாததால் அவர்களை அழைக்கவில்லை. மாநில அரசு மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன” என்றார்.

ஆட்சியரின் பதிலால் சமாதானமடையாத எம்.பி. செ.ஜோதிமணி போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தார். இதையடுத்து ஆட்சியர் த.பிரபுசங்கர் தன் அறைக்கு தி ரும்பினார். போராட்டத்தை தொடர்ந்த எம்.பி. செ.ஜோதிமணி கூறியது, ”மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான அலிம்கோ நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்திற்கு கடிதம் எழுதி கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க கேட்டுக் கொண்டுள்ளேன். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு 3 கடிதம் எழுதியுள்ளேன். கரூர் மக்களவைக்கு உட்பட்ட திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் முகாம்கள் நடத்தி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காரணமாக முகாம் நடத்தப்படவில்லை. ஒரு மக்களவை தொகுதியை அவர்கள் ஒரு யூனிட்டாக கருதுகின்றனர். கரூர் மாவட்டத்தில் முகாம் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்தால் அனைவருக்கும் உபகரணங்கள் வழங்க இயலும், பிற மாவட்டங்களில் வழங்கிவிட்டால் கரூர் மாவட்டம் விடுப்பட்டு விடும்.

இதுதொடர்பாக ஆட்சியருக்கு கடிதம் வைத்து வட்டார வாரியாக மாற்றுத்திறனாளி முகாம்கள் நடத்த தெரிவித்த நிலையில் அலிம்கோ இணைத்து செயல்படாமல் மாநில அரசின் திட்டத்தின் கீழ் மட்டுமே ஆட்சியர் முகாமை நடத்தி வருகிறார். அலிம்கோ தயாரிப்புகள் தரமற்றவை எனக் கூறுகிறார். அதனை பயன்படுத்தாமலே எப்படி அவ்வாறு அவர் கூறுகிறார். ஊழல் கறை படித்த ஆட்சியர் அதன் மூலம் ஏதும் பயன் இருக்காது என்பதால் மத்திய அரசு திட்டத்தை புறக்கணிக்கிறார். முகாம் விபரம் குறித்த கடிதம் வழங்கும் வரை போராட்டம் தொடரும்” என்றார்

மதியம் 12.30 மணிக்கு போராட்டத்தை தொடங்கிய எம்.பி. செ.ஜோதிமணி மதியம் 3.30 மணியை கடந்தும் 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தை தொடர்ந்தார். அவருடன் கரூர் நகர தலைவர் பெரியசாமி, மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x