Published : 19 Nov 2021 06:11 PM
Last Updated : 19 Nov 2021 06:11 PM
தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்களும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னெடுத்தால், அந்தக் கோரிக்கையிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில்வே பயிற்சி மைய வளாகத்தில், ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) பி.ஜி.மல்லையா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்), எம்.செல்வராசு (நாகப்பட்டினம்), சு.திருநாவுக்கரசர் (திருச்சி), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்), கார்த்தி ப.சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ் கனி (ராமநாதபுரம்), டி.ஆர்.பாரிவேந்தர் (பெரம்பலூர்), எஸ்.ராமலிங்கம் (மயிலாடுதுறை) மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்.சண்முகம், எம்.முகம்மது அப்துல்லா மற்றும் ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
''குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிய விவசாயிகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த பிறகும் வேளாண் சட்டத்தில் ஒரு புள்ளியைக்கூட மாற்றமாட்டோம் என்று பாஜக அரசும், பிரதமர் மோடியும் விடாப்பிடியாக இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு, எல்லா காலகட்டத்திலும் காங்கிரஸ் ஆதரவாக இருந்தது.
தமிழ்நாட்டுக்கு ஓராண்டுக்கு முன் ராகுல் காந்தி வந்தபோது, வேளாண் சட்டங்களைப் பிரதமர் மோடி கண்டிப்பாகத் திரும்பப் பெறும் சூழல் வரும் என்றார். அந்த வார்த்தை இன்று உண்மையாகிவிட்டது. 3 வேளாண் சட்டங்களைப் பிரதமர் மோடி திரும்பப் பெற்றது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோரின் கருத்து. இந்த மனநிலை இப்போதுதான் மற்ற மாநிலங்களில் உருவாகி வருகிறது. எனவே, தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்களும் நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னெடுத்தால், அந்தக் கோரிக்கையிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இது தொடர்பாகப் பிற மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியதை வரவேற்கிறேன்.
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 19,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம். ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் இருப்பதை அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்கள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்து, ரயில்வே தேர்வில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
ரயில்வே துறைத் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆர்வம் காட்டி, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்''.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT