Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

பல்பொருள் அங்காடியில் ரவுடிகள் அட்டூழியம்: காஞ்சியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம் பல்பொருள் அங்காடியில் புகுந்து அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல் (சிசிடிவி காட்சி).

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பல்பொருள் அங்காடியில் புகுந்த ரவுடி கும்பல் அந்த அங்காடியை அடித்து நொறுக்கியதுடன் பல்வேறு இடங்களில் 4 பேரை அரிவாளால் வெட்டியுள்ளது.

காஞ்சிபுரத்தில் முக்கிய தாதாவாக வலம் வந்தவர் ஸ்ரீதர். இவர் காவல் துறையின் நெருக்கடி காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா தப்பிச் சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டார். தர் இறந்த பிறகு அவரது இடத்தை யார் பிடிப்பது என்பது தொடர்பாக அவரது உறவினர் தணிகா மற்றும் கார் ஓட்டுநர் தினேஷ் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இதற்காக 2 குழுக்களும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன.

இதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் தினேஷின் ஆதரவாளர்கள், காஞ்சிபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தை மிரட்டியுள்ளனர். அங்கிருந்த இருவர் தடுத்தபோது அவர்களை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். வெட்டுபட்டவர்கள் பலத்த காயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ரவுடி கும்பல் அங்கிருந்து கிளம்பி சாலை தெரு பகுதிக்கு வந்துள்ளனர். அங்குள்ள பல்பொருள் அங்காடியில் ஏற்கெனவே பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் கொடுக்காததால் கடையில் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதற்கு முன்னதாக சிறுவாக்கம் பகுதியில் ஏரி மீனை ஏலம் விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ‘எங்களை கேட்காமல் யாரும் ஏலம் எடுக்கக் கூடாது' என்று தினேஷின் அடியாட்கள் ராஜமன்னார், வெங்கடேசன் ஆகிய இருவரை வெட்டியுள்ளனர். அவர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 4 பேரை வெட்டிவிட்டு, சூப்பர் மார்கெட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார், தினேஷின் கூட்டாளிகளான ஜெமினி, ஜெகன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீதருக்கு அடுத்து காஞ்சிபுரத்தின் தாதாவாக வலம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள்இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு பின்னணியில் பெரிய சதித்திட்டம் உள்ளது. போலீஸார் காஞ்சிபுரத்தில் ரவுடிகளை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x