Published : 24 Jun 2014 11:34 AM
Last Updated : 24 Jun 2014 11:34 AM

பாகனை விரட்டிய யானை: 2 மணி நேரம் பீதியில் மக்கள்

திற்பரப்பு அருகே தன்னைத் தாக்கிய பாகனை, கோபத்தில் யானை விரட்டிச் சென்ற சம்பவத்தால், அப்பகுதியில் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், ‘அனுபமா’ என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். கோயில் திருவிழா, ஊர்வலம் போன்றவற்றுக்கு, யானையை வாடகைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்த யானையை பாகன் கேசவன் பராமரித்து வருகிறார்.

வழியில் நின்ற யானை

திங்கள்கிழமை காலை திற்பரப்பில் இருந்து காட்டாத்துறைக்கு யானையை கேசவன் அழைத்துச் சென்றார். காலை 10.30 மணிக்கு சிதறால் சந்திப்பு அருகே வந்த போது, யானை வழியில் நின்றது. கேசவன் பலவிதமாக முயற்சி செய்தும் யானை நகரவில்லை. ஆவேசமடைந்த கேசவன் யானையில் இருந்து கீழே இறங்கி, கம்பால் யானையைத் தாக்கினார்.

ஆவேசமடைந்த யானை, கேசவனை தும்பிக்கையால் பிடிக்க முயன்றது. யானையின் பிடியில் இருந்து தப்பிய கேசவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். யானை கேசவனை விடாமல் விரட்டியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பள்ளியில் தஞ்சம்

யானை மற்றவர்களை கண்டுகொள்ளாமல், கேசவனை மட்டுமே குறிவைத்து விரட்டியது. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் புகுந்த கேசவன், பள்ளி நுழைவு வாயில் கேட்டை மூடிவிட்டு, பள்ளி வளாகத்தில் மறைவிடத்தில் பதுங்கினார்.

ஆவேசத்துடன் விரட்டிய யானை பள்ளியின் கேட் முன்பு பிளிறியபடி நின்றது. தூரத்தில் இருந்து பொதுமக்கள் பீதியுடன் யானையின் நடவடிக்கையை வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்த யானை உரிமையாளர் முரளிதரன் பகல் 12.30 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தார். அதுவரையிலும் அந்த இடத்தை விட்டு நகராமல், பாகனை தேடிக் கொண்டிருந்த யானைக்கு வெல்லம் கொடுத்து சமாதானப்படுத்தினார்.

தொடர்ந்து யானையை அவரே அழைத்துச் சென்றார். தன்னைத் தாக்கிய பாகனை குறி வைத்து யானை விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x