Published : 16 Nov 2021 03:08 AM
Last Updated : 16 Nov 2021 03:08 AM
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்களிப்பதற்காக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை புதிதாக சேர்த்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும்முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்இந்த மாதம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்குமெனதேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் இணையதளத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து உள்ளதால் அந்தப் பகுதி வாக்காளர்களை நகர்ப்புற பகுதியில் சேர்க்கும் சிலர் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அடுத்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வாக்களிப்பதற்காக ஏற்கெனவே தேர்தல் நடந்து முடிந்த ஊரகப் பகுதியில் வாக்களித்தவர்கள் நகர்ப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தாற்போல் ஆவணங்களை தயார் செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வருகின்றனர். இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரில் ஆய்வு செய்ய வேண்டும்
எனவே, தேர்தல் ஆணையம் புதிதாக பெயர் சேர்க்க வரும் நபர்கள் குறித்து சம்பவ இடத்துக்குநேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இதற்கு முன் அவர்ஊரகப் பகுதிகள் வாக்களித்துள்ளாரா என பார்க்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மோசடிகள் இன்றி சிறப்பாக நடக்கவும் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
39,838 பேர் விண்ணப்பிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்களில் 39,838 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
2022 ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,795 வாக்குச்சாவடிகளில் சிறப்பு திருத்த முகாம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. முகாமில் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதியில் பெயர் சேர்க்க (படிவம் 6) 33,409 பேர் விண்ணப்பித்தனர். பெயர் நீக்கத்துக்கு (படிவம் 7) 879 பேர், திருத்தத்துக்கு (படிவம் 8) 2,709 பேர், முகவரி மாற்றத்துக்கு (படிவம் 8 ஏ) 2,841 பேர் என மொத்தம் 39,838 பேர் விண்ணப்பம் செய்தனர்.
மேலும் வரும் 27, 28-ம் தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு திருத்த முகாம் நடக்குமென அறிவிக்கப்பட்டது. காலை 9:00 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் மாலை 5:30 மணி வரை நடைபெறும். இதுதவிர, ஆன்லைன் மூலமும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT