Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க 7-வது மாநில மாநாடு, தஞ்சாவூரில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சரவணன், நிர்வாகிகள் முரளி, பிச்சைமுத்து, சுமதி, சரவணன், பூங்கொடி, ஜெயச்சந்திரராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக் குழுத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேசினார்.
மாநாட்டில், ரேஷன் கடை பணியாளர் சங்க சட்ட ஆலோசகர் அ.மார்க்ஸ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வெ.மணிவாசகம், பகுதிநேர ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் இரா.லோகநாதன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஓய்வூதியம், பணிக்கொடையை உடனே வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் செலவு, கொள்முதல் விலை, விற்பனைவரி ஆகியவற்றை உள்ளடக்கி, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பாதிப்புகளில் இருந்து அரசுப் பணியாளர்கள் தங்களை மீட்டுக்கொள்ள, மழைக்கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டிச.12-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநிலத் தலைவரும், வரவேற்புக் குழு பொருளாளருமான ஆறுமுகம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT