Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM

நெல்லை, தென்காசியில் மிதமான மழை: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 8,213 கன அடி தண்ணீர் வரத்து

பாபநாசம் அணையிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் ஆற்றிலுள்ள மண்டபங்களை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்கிறது. (வலது) குற்றாலம் பிரதான அருவியில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்று மழையின் தாக்கம் சற்று குறைந்தது. பல இடங்களில் தூறலுடன் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியாறு அணையில் 70 மி.மீ. மழை பதிவானது. ராதாபுரத்தில் 52.60 மி.மீ., பாபநாசத்தில் 41, நம்பியாறு அணையில் 29, சேர்வலாறில் 28, மணிமுத்தாறில் 20, அம்பாசமுத்திரத்தில் 17, களக்காட்டில் 16.40, நாங்குநேரியில் 16, சேரன்மகாதேவியில் 11.20, மூலக் கரைப்பட்டியில் 8, பாளையங்கோட்டையில் 7, திருநெல்வேலியில் 4.20 மி.மீ. மழை பதிவானது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 8,213 கனஅடி தண்ணீர் வந்தது. 143 அடி உயரமுள்ள இந்த அணையில் நீர்மட்டம் 138.40 அடியாக இருந்தது. நிரம்பும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 7,390 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.46 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,450 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 118 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 87.90 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 23 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 21.64 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாகவும் இருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. குண்டாறு அணையில் 44 மி.மீ., அடவிநயினார் அணையில் 43, கடனாநதி அணையில் 24, ஆய்க்குடி, செங்கோட்டையில் தலா 23 , தென்காசியில் 18.40, ராமநதி அணையில் 10, கருப்பா நதி அணையில் 4 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி விட்டதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 328 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 68 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 100 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 105 கனஅடி நீர் வீதம் வெளி யேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 125 அடியாக இருந்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப் பட்டு வருவதால் கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தாழ்வான இடங்களில் இருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதி களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x