Published : 12 Nov 2021 07:17 PM
Last Updated : 12 Nov 2021 07:17 PM

சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும்; செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை

கனமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 13 ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. நேற்று மாலை வரை சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் முழுவதுமாக வடியாத நிலையில் சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலைதான், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நிலவுகிறது.

இதனால், நாளை சென்னை, திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நாளை (நவ.13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடந்த 9 ஆம் தேதி முதலே தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் இனி திங்களன்றே மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை:

இந்தநிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு அந்தமான் கடலில் உருவாக சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (நவம்பர் 13-ம்) தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 15-ம் தேதி இந்த கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை:

இதனால், அடுத்த 3 நாட்களில் கேரளாவில் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை செய்யவும் வாய்ப்புண்டு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x