Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையால் குடியிருப்புகள், மருத்துவமனைகளில் தண்ணீர் புகுந்தது: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியேற்றம்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் வெளியேற்றப்பட்டு காலியாக இருக்கும் படுக்கைகள். படங்கள்: எம்.முத்துகணேஷ்

காஞ்சிபுரம்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்தது. குன்றத்தூர் அருகே நீரில் சிக்கிய பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 40.40 மி.மீ, பெரும்புதூரில் 101.50, உத்திர மேரூரில் 72.80 , வாலாஜாபாத்தில் 45.10, செம்பரம்பாக்கத்தில் 135, குன்றத்தூரில் 139.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 89.07 மி.மீ. மழை பெய்துள்ளது.

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி திருப்போரூரில் 116.6 மி.மீ., செங்கல்பட்டில் 104.4, திருக்கழுக்குன்றத்தில் 113.2, மாமல்லபுரத்தில் 68.8, மதுராந்தகத்தில் 92, செய்யூரில் 98, தாம்பரத்தில் 232.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் பெய்த அதிகனமழையால் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டனர். இந்தப் பணிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

இதேபோல, சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால், தரைதளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்துக்கு மாற்றப்பட்டனர்.

நோயாளிகள் பலர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மழை காரணமாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதை யடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல, தாம்பரம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கின.

பீர்க்கங்கரணை ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் இருப்புலியூரில் புகுந்த தால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக் குள்ளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x