Published : 11 Nov 2021 05:06 PM
Last Updated : 11 Nov 2021 05:06 PM
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் படுகொலை சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் திருவாரூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நடேச.தமிழார்வன் நேற்று 8 பேர் கொண்ட கும்பலால் நீடாமங்கலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகள் 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நீடாமங்கலம் ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நடேச.தமிழார்வன் நேற்று முன்தினம் மாலை நீடாமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு அருகாமையில் 8 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக நீடாமங்கலத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
ஒரு அரசுப் பேருந்து உட்பட அந்தப் பகுதியாக வந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், அதுவரை தமிழார்வனின் உடலை ஒப்படைக்க மறுத்தும் அவரது ஆதரவாளர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக நீடாமங்கலத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி பர்வேஷ்குமார் ஆகியோர் நிகழ்விடத்தை நேரடியாகப் பார்வையிட்டதோடு, குற்றவாளிகளைப் பிடிக்க ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர், 5 போலீஸார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். தமிழார்வனின் உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளி ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் திருவாரூர் எஸ்.பி. விஜயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தமிழார்வன் நீடாமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்குச் செல்வதற்காக வருகை தந்தபோது அவரை வழிமறித்த கும்பல் அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழார்வன் உயிரிழந்தார். மேலும் கொலையாளிகள் ஓட்டிவந்த மோட்டார் பைக் ஒன்றையும் நிகழ்விடத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதனைக் கொண்டு விசாரணை நடத்தியதில், இந்தக் கொலைச் சம்பவத்தில் பூவனூரைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள்தான் இதனைச் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பில் பதுங்கியிருந்த ஆர்.ராஜ்குமார் (33), பாடகச்சேரி மாதவன் (23), பூவனூர் அக்ரஹாரம் மனோஜ் (23), அறையூர் தென்பாதி சேனாதிபதி (25), அறையூர் எழிலரசன் (22) ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர். மேலும் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடி வருகின்றோம்.
கொலை நிகழ்ந்தது ஏன்?
பூவனூர் ராஜ்குமார் உறவினர் கலைமணி என்பவருக்கும், ராஜ்குமாருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டது. இதில் கலைமணிக்கு ஆதரவாக தமிழார்வன் செயல்பட்டார். கலைமணி கொடுத்த புகாரில் ராஜ்குமார், அவரது தம்பி ராமமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உறவினர்களுக்குள் நிகழ்ந்த சண்டையை போலீஸ் வழக்குப் பதியும் அளவுக்கு நடேச தமிழார்வன் கொண்டு சென்றுவிட்டார் என்பதாலும், ராஜ்குமாரின் வளர்ச்சிக்குப் பல விதத்திலும் தமிழார்வன் தடையாக இருக்கிறார் என்ற காரணத்தாலும் ஆத்திரமடைந்து, ஜாமீனில் வெளிவந்தவுடன் இந்தக் கொலைச் சம்பவத்தைச் செய்ததாக கொலையாளிகள் தெரிவிக்கின்றனர். ராஜ்குமார் ஏற்கெனவே நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளார். மேலும் சில வழக்குகளும் ராஜ்குமார் மீது உள்ளன.
இந்தச் சம்பவத்தில் அப்பகுதி மக்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில் நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி (28) என்பவர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வடுவூர் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சை டிஐஜி பர்வேஷ்குமார், திருவாரூர் எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் பாராட்டினர். நீடாமங்கலத்தில் மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சுமார் 850 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு திருவாரூர் எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.
இதனிடையே நேற்று மதியம் நடேச.தமிழார்வனின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நீடாமங்கலம் வழியாக அவரது சொந்த ஊரான ஒளிமதி கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அதுவரை நீடாமங்கலத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் நீடாமங்கலம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT