Published : 10 Nov 2021 07:10 PM
Last Updated : 10 Nov 2021 07:10 PM

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை: நீடாமங்கலத்தில் பதற்றம்- போலீஸார் குவிப்பு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் (50). இவர் இன்று மாலை நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஓன்று, அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நடேச.தமிழார்வன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த அவரது ஆதரவாளர்கள், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கொலைச் சம்பவத்தை கண்டித்து நீடாமங்கலம் கடை வீதியில் உள்ள கடைகள், அவ்வழியாகச் சென்ற வாகனங்களைக் கல்வீசித் தாக்கினர். தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். பின்னர் தமிழார்வனின் உடல் முன்பு அமர்ந்து, கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென கோஷமிட்டனர்.

மேலும் நீடாமங்கலத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தமிழார்வனின் உடலை போலீஸாரிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதனால் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் திருவாரூர் எஸ்பி விஜயகுமார் தலைமையேற்று நேரடியாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். நீடாமங்கலத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நடேச.தமிழார்வன் (50). நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்தார். நீடாமங்கலம் பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகப் போரடியவர். இவர் மீது அரசியல் வழக்குகள் தவிர பல்வேறு அடிதடி வழக்குகளும் இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நிலையிலேயே தப்பியோடினார். இது தொடர்பான வழக்கையும் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x