Published : 10 Nov 2021 05:41 PM
Last Updated : 10 Nov 2021 05:41 PM
தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வாய்ப்பே கொடுப்பதில்லை என்று நாமக்கல்லில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுலகக் கூட்டரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''எந்த அரசாங்கமாக இருந்தாலும் சாலைகளை விரிவுபடுத்துவது தவிர்க்க முடியாது. எனவே சாலையை விரிவுப்படுத்த மரங்களை வெட்ட வேண்டிய சூழல் வருகிறது. எனினும், மரத்தை வெட்டிவிட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது. எனவே முதல்வர் அறிவுறுத்தல்படி சாலைகளின் இருபுறமும் மரங்கள் நடப்படும். மழைக்காலம் முடிந்த பின் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் கட்டாயம் செப்பனிடப்படும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வாய்ப்பே கொடுப்பதில்லை. அவரே நேரடியாகக் களத்தில் இறங்கி வேலை செய்கிறார். சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கும் என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்தையும் முதல்வர் அறிந்து வைத்துள்ளார். அதனால் அதிகாரிகளிடம் நேரடியாகப் பிரச்சினை குறித்துத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க உத்திரவிடுகிறார். ஏனெனில் அவர் ஏற்கெனவே சென்னை மாநகர மேயராக இருந்துள்ளார்.
ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன்வேஸ் சாலை மற்றும் தலைமைச் செயலக சாலை என இரண்டு மட்டும்தான் தெரியும். வேறு எதுவும் தெரியாது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதாவது சொல்ல வேண்டுமென அரசு மீது அவர் குற்றச்சாட்டைச் சொல்கிறார். இணைப்புச் சாலைகளில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும். அதை எப்படி வெளியேற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். இரண்டு மணி நேரத்தில் இணைப்புச் சாலையில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது''.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT