Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்க நடவடிக்கை; 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தல்

மேட்டூர் அணை நீர்தேக்கப்பகுதியில் உள்ள நீர்மட்ட அளவீடு பகுதியில் நேற்று சேலம் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். உடன் துணை ஆட்சியர் வீர் பிரதாப் சிங், நீர்வளத்துறை செயற்பொறியாளர் தேவராஜன் உள்ளிட்டோர்.

சேலம்

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் டெல்டா மாவட்டம் உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் எந்த நேரத்திலும் திறக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை அடுத்த 36 மணி நேரத்தில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அணை நீர்மட்டம் 118 அடியை நெருங்கியுள்ளது. அணையில் 93.47 டிஎம்சி வரை தண்ணீரை தேக்க முடியும். தற்போது நீர்இருப்பு 89.84 டிஎம்சி-யாக உள்ளது.

அணைக்கு பிலிகுண்டுலுவில் இருந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியும், பாலாற்றில் இருந்து 4 ஆயிரம் கனஅடியும் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 350 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 7,983 கனஅடியும், கபினி அணையில் இருந்து 1,900 கனஅடியும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, மேட்டூர் அணை நாளை (9-ம் தேதி) மாலை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பியதும் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்படும். எனவே, காவிரிக் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

நீர்வரத்தை வேடிக்கை பார்ப்பதற்காகவோ, நீர்நிலைகளில் விளையாடவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஆற்றின் இருபுறங்களில் உள்ள கரைப் பகுதிகளின் அருகில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டங்கள் உட்பட 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அணையின் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் தொடர்பாக உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் டெல்டா உட்பட 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்யவும், கரையோரப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆட்சியர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலருக்கு (நீர் வளத்துறை) மேட்டூர் அணை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x