Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழக உரிமையை மீட்கவிவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுத்துவிட்டதாகக் கூறி, தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை தலைமை வகித்துப் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. 108 அடிக்கு மேல் உள்ள நீரைத்தான் தமிழகத்துக்குத் திறந்துவிட முடியும். எனவே ஒவ்வொரு அடி நீரும் நமக்கு முக்கியம்.
தற்போது கேரள அரசு முன்அறிவிப்பின்றி தங்கள் மாநிலத்துக்கு நீரைத் திறந்துவிட்டது உச்சகட்ட அலங்கோலம். நீர் திறப்பின்போது தேனி ஆட்சியர், தமிழக அமைச்சர்கள் இருப்பதுதான் முறை. ஆனால், இந்த மரபு மீறப்பட்டு தமிழக உரிமை பறிபோய் உள்ளது. நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விவசாயிகள் போராடத் தொடங்கியதும் அணையை ஆய்வு செய்யவே வருகிறார்.
பேபி அணையைப் பலப்படுத்த இடையூறாக இருந்த மரங்களை வெட்ட அனுமதித்த கேரள அரசுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார். ஆனால், நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று கேரளம் கூறுகிறது.
தமிழக உரிமையை விட்டுக் கொடுத்ததற்காக முதல்வர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தவேண்டும். இல்லை என்றால் விவசாயிகளைத் திரட்டி பேரணியாகச் சென்று அணையில் போராட்டம் நடத்துவோம்.
விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எங்களுடன் இணைந்து போராட வர வேண்டும். மதுரை எம்பி சு.வெங்கடேசன், சென்னை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசைக் கண்டிக்கிறார். தங்கள் பகுதி விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினை குறித்து அவர் வாய் திறப்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் பாண்டியன் வரவேற்றார்.
முன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, “முதல்வர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது அந்நகரம் கடும் பாதிப்பை சந்தித்தது. அப்போது எப்படி இருந்ததோ இப்போதும் அதே நிலைமையில்தான் உள்ளது. மழை பாதிப்பை சரிசெய்ய முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT