Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 175 ஏரிகள் நிரம்பின

தொடர் மழை காரணமாக நிரம்பும் நிலையில் உள்ள மதுராந்தகம் ஏரி.

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 175 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன. மழைகாரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகளும் என முழு கொள்ளவை எட்டியுள்ளன.

இரு மாவட்டங்களிலும் சேர்த்து152 ஏரிகளில் 70 சதவீதத்துக்கு மேலும், 193 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு மேலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. இந்த ஏரியின் உயரம் 23.3 அடி. இதில் தற்போது 22.9 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது.

எனினும், ஏரிக்கான நீர்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டதால், ஏரி உடனடியாக நிரம்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏரிமுழுமையாக நிரம்ப இரு தினங்கள் ஆகும் என்றும், திடீரென்று அதிக மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே ஒரு நாளில் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

14 வீடுகள் சேதம்

வாலாஜாபாத் அருகேயுள்ள கோயம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் மகன் கமலேஷ் (15) அக். 4-ல் இடிதாக்கி உயிரிழந்தார். பெரும்புதூர் அருகேயுள்ள பட்டுமுடையார்குப்பத்தைச் சேர்ந்த பலராமன் மகள் சிவரஞ்சனி(7), அக். 6-ம் தேதி மின்கம்பி அறுந்து விழுந்ததில் உயிரிழந்தார். அக். 11-ம் தேதி வாலாஜாபாத் அருகேயுள்ள புத்தாகரம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பிரகாஷ்(35), மகள் துர்காதேவி(24) ஆகியோர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

இதேபோல, காஞ்சிபுரம், உத்திரமேரூர் பகுதிகளில் தொடர் மழையால் தலா ஒரு பசுவும், குன்றத்தூர் பகுதியில் 2 பசுக்களும் உயிரிழந்தன. மேலும், 14 வீடுகள் சேதமடைந்தன. வாலாஜாபாத் பகுதியில் 7 வீடுகளும், காஞ்சிபுரம், உத்திரமேரூர் பகுதிகளில் தலா 3 வீடுகளும், பெரும்புதூர் பகுதியில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளன.

பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x