Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இனி 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

திருச்செந்தூர் கோயிலில் முழுநேர அன்னதான விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அன்னதானம் வழங்கினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழுநேர அன்னதான விரிவாக்க திட்டத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் சில குறிப்பிட்ட கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலிலும் முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தினசரி சுமார் 2,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் வசதிக்காக இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கோயில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோயில் கந்தசஷ்டி மண்டபம், அன்னதான மண்டபமாக மாற்றம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட அன்னதான மண்டபத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதன் மூலம் தினசரி சுமார் 4 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதான திட்டத்தில் பயன் பெறுவார்கள். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொ) சுப்புலெட்சுமி, ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோயில் இணை ஆணையர் (பொ) குமரதுரை, தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணியம் ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x