Last Updated : 05 Nov, 2021 06:35 PM

 

Published : 05 Nov 2021 06:35 PM
Last Updated : 05 Nov 2021 06:35 PM

ஏற்காட்டில் மண் சரிவு: திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மன்னார்பாளையம் மற்றும் கோராத்துப்பட்டி கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார். உடன் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று (4-ம் தேதி) பெய்த கனமழையால் ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் கடும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளைத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பாதுகாப்பாய் மீட்டனர். மழைக்கு திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

சேலம் மாவட்டம் முழுவதும் கனமழை:

சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரகாலமாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கார்மேகம் சூழ, குளிர்ந்த காற்று வீச, இரவில் பனிப்பொழிவால் குளுமையான சீதோஷ்ண நிலையை சேலம் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த 2-ம் தேதி நண்பகல் இடி மின்னலுடன் பெய்ய ஆரம்பித்த மழை 3-ம் தேதி அதிகாலை வரை கொட்டி, அடங்கியது.

மீண்டும் நேற்று (4-ம் தேதி) மாலை 6 மணிக்கு வானில் மேகங்கள் திடீரெனத் திரண்ட நிலையில், பலத்த காற்றுடன், இடி முழங்க, மின்னல் வெட்டுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு 8 மணிக்கு சூறைக்காற்று வீச, வேகமெடுத்த மழை நேற்று அதிகாலை வரை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளான நாராயணன் நகர், தாதுபாய்குட்டை, சேர்மேன் ராமலிங்கம் ரோடு, அம்மாபேட்டை சித்தேஸ்வரா ரோடு, ஆறுமுக நகர், பச்சப்பட்டி, சூரமங்கலம் முல்லை நகர், செவ்வாய்ப்பேட்டை, லீ-பஜார், சத்திரம், நான்கு ரோடு, ஐந்து ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிப் பல வீடுகளுக்குள் புகுந்தது. அதேபோல, ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், எடப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

ஏற்காடு - குப்பனூரில் மண் சரிவு:

ஏற்காட்டில் பெய்த கனமழையால் மலைப் பாதைகளில் திடீர் நீர்வீழ்ச்சி ஏற்பட்டு ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகியுள்ளன. மலைப்பாதை வழியாக வழிந்தோடும் தண்ணீரும், கனமழையும் ஒன்றுசேர்ந்து ஏற்காடு மலைப்பாதையில் பெய்த நிலையில், மண் அரிப்பை ஏற்படுத்தியும், பாறைகள் உருண்டும் கடும் சேதத்தை விளைவித்துள்ளன. குப்பனூரில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு சாலையை அடைத்தன. கொட்டச்சேடு பகுதியில் இருந்த தரைப்பாலத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகள் பலரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு, பாதுகாப்பாய் சேலம் அனுப்பி வைத்தனர்.

ஏற்காடு மலைப்பாதையில் ஆட்சியர் நேரில் ஆய்வு

ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு சேதத்தை ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குப்பனூர் சாலையில் 6 கி.மீ., தொலைவுக்கான சாலையில் மண் சரிவு காரணமாகப் பாறைகள் உருண்டு, சாலை சேதம் அடைந்துள்ளது. சாலையில் நிரம்பிக் கிடந்த கற்பாறைகளை அப்புறப்படுத்திட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.

பொக்லைன் வண்டிகளை அதிகாரிகள் வரவழைத்து, சாலையில் இருந்த பாறைகளை அப்புறப்படுத்தி, மண் சரிவைச் சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாகப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மன்னார்பாளையம் மற்றும் கோராத்துப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலத்தைத் தாண்டி தண்ணீர் சென்றதால் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை, தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரிசெய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். கோராத்துப்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து தேவையான உதவிகளை மேற்கொள்ள வருவாய்த் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மழை பாதிப்பு சம்பந்தமாக 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணித்து, பாதிப்புள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு :

கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சேர்வராயன், ஏற்காடு மலைகளில் இருந்து வரும் மழை நீர் சேலம் கன்னங்குறிச்சி அடிவாரத்தில் உள்ள புது ஏரியை வந்தடையும். நேற்று முன்தினம் பெய்த மழையால் ஏற்காட்டில் இருந்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து புது ஏரியை நிரப்பியது. புது ஏரியில் இருந்து வழக்கமாக மூக்கனேரிக்கு மழை நீர் வந்து, அங்கிருந்து திருமணித்தாற்றுக்குச் செல்லும்.

மூக்கனேரி நிரம்பும் தருவாயில் உள்ளதாலும், இந்த ஏரி நிரம்பினால் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியான சின்ன திருப்பதிக்குள் புகுந்து, பொதுமக்களுக்குக் கடும் இடையூறு ஏற்படுத்தும். இந்தக் காரணத்தால் புது ஏரியில் இருந்து மழை நீர் நேரடியாக திருமணிமுத்தாற்றுக்கு அதிகாரிகள் திருப்பி விட்டனர். இதனால், திருமணிமுத்தாறு ஆணை மேடு பகுதியில் நுங்கு நுரை பொங்கிட செந்நிற மழை நீர் பொங்கி வழிந்தோடு, ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு திருமணிமுத்தாற்றில் செல்லும் மழை நீரைப் பொதுமக்கள் அணைமேடு பாலம், ஆனந்தா பாலம், அப்ஸ்ரா பாலங்களில் நின்று பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் மன்னார்பாளையம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் மன்னார்பாளையம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:

சேலம் -66, ஆத்தூர் -63.2, பெத்தநாயக்கன்பாளையம் -24, எடப்பாடி 18.4, ஆணைமடுவு -16, வீரகனூர்-13, கரியகோவில் -11, தம்மம்பட்டி-10, ஏற்காடு -10, காடையாம்பட்டி - 8, ஓமலூர் -5, மேட்டூர் 3.8 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x