Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

அடுத்தடுத்த சர்ச்சைகளால் திடீர் திருப்பம்: கடையம் ஒன்றியக் குழு தலைவர் ராஜினாமா வாபஸ்

நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றியக் குழு தலைவர், நேற்று தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றி பெற்றனர். ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

திமுக சார்பில் ஜெயக்குமாரையே ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடையம் ஒன்றிய திமுகச் செயலாளர் குமார் முயற்சியால், அதிமுக ஆதரவுடன் செல்லம்மாள் வெற்றிபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. திமுக தலைமை உத்தரவின்பேரில் ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து குமார் நீக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ஒன்றியக் குழு தலைவர் பதவியை செல்லம்மாள் ராஜினாமா செய்தார்.

`தலைவர் பதவியில் செல்லம்மாள் நீடிக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடியே 10 லட்சம் தர வேண்டும்’ என்று தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் கேட்பதுபோன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை அதிகப்படுத்தியது.

இதனிடையே, `செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது. செல்லம்மாளிடம் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்து ராஜினாமா செய்ய வைத்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி, கடையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக செல்லம்மாள் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹெலனிடம் நேற்று கடிதம் அளித்தார்.

இதுகுறித்து செல்லம்மாளிடம் கேட்டபோது, “அப்போது இருந்த சூழ்நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன். தற்போது, ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்துள்ளேன். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x