Published : 30 Oct 2021 03:13 AM
Last Updated : 30 Oct 2021 03:13 AM
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார். இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நேற்று (அக்.29) வெளியான `இந்து தமிழ்' நாளிதழில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விவசாய சாகுபடி பரப்பு குறைந்தது தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தியை சுட்டிக்காட்டி விவசாயிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய உற்பத்தியைப் பெருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், வேளாண் உற்பத்தியைப் பெருக்க பசுமைத் திட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் இணைக்கப்படுவர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.நேரு பேசும்போது, ``கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படாமல் உள்ளது. மழைக்காலம் நெருங்குவதால், கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்த கால்நடைத் துறை அதிகாரிகள், "மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய மருந்து இன்னும் வரவில்லை. வந்தவுடன் தடுப்பூசி போடப்படும்" என்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக ஆதரவு விவசாயிகள், "மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை முறையாக செய்துவருகிறது. அதிகாரிகள்தான் தேவையானவற்றை மாநில அரசு மூலம் கேட்டுப் பெற வேண்டும்" என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர், "கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிபோட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய கே.நேரு, "பாலாற்றில் வெங்குடி, வெங்கட்டாவரம் பகுதிகளில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மரம் மாசிலாமணி கூறும்போது, "வனத்துறை மூலம் செம்மரங்கள், சந்தன மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, விவசாயிகள் வளர்த்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2,500 ஹெக்டர் அளவுக்கு செம்மரங்கள் உள்ளன. ஆனால், விற்பனை வாய்ப்புகளை உருவாக்க வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இயற்கை விவசாயம் செய்வோருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேப்பம் பிண்ணாக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
விவசாயிகள் பேசும்போது, "பழைய சீவரம் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து அரும்புலியூர் ஏரிக்கு தண்ணீர் செல்லவில்லை. செய்யாற்றில் வெங்கச்சேரி பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து காவாந்தண்டலம் ஏரிக்கு தண்ணீர் செல்லவில்லை. ஏரிகளைத் தூர்வாருவதுடன், வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும். உரங்கள் தடுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், வேளாம் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், முன்னோடி வங்கி மேலாளர் சண்முகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT