Published : 26 Oct 2021 03:07 AM
Last Updated : 26 Oct 2021 03:07 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.1.86 கோடி நிதியுதவியை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு ரூ.1.86 கோடி நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இவை தவிர ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில்7 பழங்குடியினருக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், மின்துறை சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.15.22 லட்சம் மதிப்பில் இலவச மின் இணைப்புக்கான அட்டைகள் என மொத்தம் ரூ.2.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த உதவிகளை வழங்கி ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது:
நமது மாவட்டத்தில் 8,98,423பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 6,68,164 பேருக்கும், இரண்டாவது தவணையாக 2,03,249 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் முகாம்களை நாள்தோறும் நடத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் கரோனா 3-வது அலை பரவிக் கொண்டுள்ளது. கரோனா ஒழிய வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மக்களவை உறுப்பினர் க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT