Published : 25 Oct 2021 05:42 PM
Last Updated : 25 Oct 2021 05:42 PM
ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கை அடுத்து, அருவிக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலம் வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் குற்றாலம் எனப்படும் இந்த அருவி, கல்வராயன் மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படாமல் உள்ளதால், இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு ஏராளமானோர் வருகின்றனர்.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆங்காங்கே மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்கிறது. கல்வராயன் மலைப் பகுதிகளிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், ஆனைவாரி அருவியில், தற்போது வழக்கத்தை விட அதிகமாக நீர் கொட்டுகிறது.
அருவியில் நேற்று (அக். 24) மாலையில் பலர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், செந்நிறத்தில் நீர் கொட்ட ஆரம்பித்தது. இதனைக் கவனித்த வனத்துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தினர்.
ஆனால், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் உள்பட 5 பேர் அருவியின் மறு கரையில் ஒதுங்கினர். வெள்ளம் அதிகரித்ததால், அவர்களில் இருவர் அங்கிருந்த பாறை மீது ஏறி, குழந்தை, பெண் ஆகியோரை மீட்டனர். மற்ற இருவர் பாறை மீது ஏற முயன்றபோது, தவறி வெள்ளித்தில் விழுந்தனர். சிறிது தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சற்று தூரத்தில் கரை ஒதுங்கித் தப்பித்தனர்.
அருவியில் தொடர்ந்து வெள்ளம் கொட்டுவதால், அப்பகுதிக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை சார்பில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், "மழைக்காலம் என்பதால், அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அருவி பகுதிக்குச் செல்வதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து, அருவியில் நீர்வரத்து குறைந்த பின்னரே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா பகுதி ஆகியவற்றுக்கு அனுமதி உள்ளது. எனினும், இந்த அனுமதியும் நிலைமைக்கேற்ப மாற்றப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT