Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் 12 மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் குரலுக்கு வலு சேர்ப்பதாக அமையும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி அரியமங்கலம் லட்சுமி நர்சரி பள்ளியில் நேற்று ஓவியர் சித்தன் சிவா வரைந்த கரோனா விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் ஆகியன இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு கோரி 12 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களை திமுக எம்.பி-க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தி, நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த ஆய்வறிக்கையை அளித்து, நீட் தேர்வு விவகாரத்தில் நமது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர். அவர்களிடமிருந்து விரைவில் பதில் வரப் பெறும். மாநில உரிமைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், இப்போதும் முதல் குரல் கொடுப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு விவகாரத்தில் 12 மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில், முதல்வரின் குரலுக்கும், தமிழகத்துக்கும் கண்டிப்பாக வலு சேர்ப்பதாக அமையும்.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
பள்ளித் தாளாளர் தாமரைச்செல்வி, ஓவியர் சித்தன் சிவா, மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT