Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பரில் நடைபெற வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மருந்துகள் இல்லாததால் வரும் நவம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,28,856 பசுக்கள், 41,946 எருமை மாடுகள், 1,19,2547 செம்மறி ஆடுகள், 1,69,229 ஆடுகள் ஆகியவை வளர்க்கப்படுகின்றன. இந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகம் தாக்குகிறது. ஆடுகளை விட மாடுகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இந்த நோய் உமிழ் நீர், சிறுநீர், மலம், பால் ஆகியவற்றின் மூலம் பரவும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் உண்ணாது. பால் உற்பத்தி குறையும், வாயில் கொப்புளங்கள் உருவாகும். அசைபோடும்போது கொப்புளங்கள் உடைந்து புண் ஏற்படும்.
இந்த நோயால் மடி வீக்கம், ரத்த சோகை, மூச்சிரைப்பு, எடை மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் காரணமாக விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.
இந்த நோயை கட்டுப்படுத்த கால்நடைத் துறை சார்பில் ஆண்டுக்கு 2 முறை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இந்த முகாமில் 6 மாதத்துக்கு உட்பட்ட கன்றுக்குட்டிகள், கருவுற்ற மாடுகள் தவிர்த்து மற்ற கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.
மழைக்காலம் நெருங்குவதால்..
ஒவ்வொரு முகாமின்போதும் சுமார் 4 லட்சம் மாடுகளுக்கு போடப்படும். கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இந்த தடுப்பூசி போடப்படாமல் உள்ளது. தற்போது மழைக்காலம் நெருங்குவதால் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த தடுப்பூசியை விரைவில் போட வேண்டும் என்று கால்நடைகள் வளர்ப்போர் வலியுறுத்துகின்றனர்.
இதை தனியாக வெளியில் வாங்கி போட வேண்டும் என்றால் மருந்தின் விலை ரூ.500 மற்றும் இதர செலவுகள் என ரூ.800 வரை ரூ.1,000 வரை செலவு செய்தால் 10 மாடுகளுக்கு போடலாம். ஆனால் ஓரிரு மாடுகள் வைத்துள்ளவர்களும் ரூ.500 விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டியுள்ளது.
இதனால், விவசாயிகள் பலர் இந்த மருந்தை வாங்கி பயன்படுத்த தயங்குகின்றனர். கால்நடைத் துறை சார்பில் உடனடியாக இந்த தடுப்பூசிகளை போட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
6 மாதங்களுக்கு ஒருமுறை..
இதுகுறித்து கால்நடைத் துறை இணை இயக்குநர் ஜெயந்தியிடம் கேட்டபோது, “இந்த தடுப்பூசி 6 மாதங்களுக்கு ஒருமுறை போடப்படும். ஆனால் இந்த முறை மருந்து வருவதற்கு சிறிது காலதாமதம் ஆகிறது. இந்த மாத இறுதியில் மருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் நவம்பரில் இந்த தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த முறை மாடுகள் மட்டும் இல்லாமல் ஆடுகளுக்கும் போடலாம் என்று திட்டம் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT