Published : 22 Oct 2021 01:00 PM
Last Updated : 22 Oct 2021 01:00 PM
மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைப்பெற்றது.
இதில் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு திமுக அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளரான கண்ணனும், அமைச்சர் மஸ்தான் ஆதரவாளரான தயாளன் என்பவருக்கும் இடையே போட்டி நிலவியது.
இந்நிலையில் மறைமுக தேர்தலில் கலந்து கொள்வதற்காக மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்த கண்ணன் தரப்பினருக்கும், தயாளன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இருத்தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இருத்தரப்பினரையும் தடுத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நேரம் ஆகியும் பெரும்பாண்மைக்கான கவுன்சிலர்கள் வராததால் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.சரவணன் அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளரான கண்ணன் தரப்பினர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT