Published : 20 Oct 2021 07:01 PM
Last Updated : 20 Oct 2021 07:01 PM
வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 6,920 பேர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று (அக். 20) நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்:
வேலூர் மாவட்டத்தில், வேலூர், கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய 7 ஒன்றியங்களில் 14 மாவட்ட கவுன்சிலர்கள், 138 ஒன்றிய கவுன்சிலர்கள், 247 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,478 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில், 316 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. இறுதியான 2,151 பேர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். அவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்தது. வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் 14 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதேபோல, 7 ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றிபெற்றவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றனர். அவர்களை தொடர்ந்து, அந்தந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்வர்கள் பதவி ஏற்பதை முன்னிட்டு கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் விழா கோலம் பூண்டியிருந்தது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி, துணைத்தலைவர் பதவி, ஒன்றியக்குழு தலைவர் மற்றம் துணைத்தலைவர் பதவிகளை திமுகவினர் கைப்பற்றியுள்ளதால், அரசு அலுவலகங்கள் திமுக கட்சி அலுவலகமாகவே நேற்று மாறியிருந்தது. ஒவ்வொரு அலுவலகம் முன்பாக திமுக பேனர்கள், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களின் போஸ்டர்கள், கட்சி கொடி கட்டப்பட்ட வாகனங்கள், திமுக கொடி ஏந்திய இருசக்கர வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன.
பதவி ஏற்க வந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள, வார்டு உறுப்பினர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆதாரவாளர்களுடன் ஆரவாரத்துடன் வந்து பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு அந்தந்த அலுவலகங்கள் அருகே கூடியிருந்த கட்சியினர், அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால், வேலூர், காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஒன்றியங்களுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில், 13 மாவட்ட கவுன்சிலர்கள், 125 ஒன்றிய கவுன்சிலர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,779 ஊராட்சி வார்டு உறுப்பினர் என, மொத்தம் 2,125 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில், மாதனூர் ஒன்றியம், நாயக்கநேரி ஊராட்சியில் 1 ஒன்றிய கவுன்சிலர், 9 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. இறுதியான 2,115 பேர் தேர்தலில் வெற்றிப்பெற்றனர். அவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட கவுன்சிலர்களாக வெற்றிப்பெற்ற 13 பேருக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் 13 மாவட்ட கவுன்சிலர்களில் 12 மாவட்ட கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். 7-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் முனிவேல் இன்று பதவி ஏற்க வரவில்லை.
அதேபோல, 6 ஒன்றிய அலுவலகங்களில் 124 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். 208 ஊராட்சிகளில் நாயக்கநேரி ஊராட்சியை தவிர்த்து 207 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் 207 ஊராட்சி மன்ற தலைவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களை தொடர்ந்து, 1,770 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா, ஆற்காடு, திமிரி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், நெமிலி ஆகிய 7 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் 13 மாவட்ட கவுன்சிலர்கள், 127 ஒன்றிய கவுன்சிலர்கள், 288 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,227 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில், வெற்றிப்பெற்றவர்களுக்கான பதவி ஏற்பு விழா ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.
சிப்காட் பாரதி நகரில் உள்ள தனியார் இடத்தில் 13 மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், 13 மாவட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 7 ஒன்றிய அலுவலகங்களில் அந்தந்த ஒன்றியங்களில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், சுயேட்சை கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஊராட்சி மன்றத்தலைவராக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களை தொடர்ந்து, ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவி ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஊரக உள்ளாட்சி அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று முடிவடைந்ததை முன்னிட்டு மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழுத்தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நாளை மறுநாள் (22-ம் தேதி) நடைபெற உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிக்குழுவை திமுகவினர் கைப்பற்றியுள்ளதால், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர், துணைத்தலைவர், அதேபோல ஒன்றியக்குழுத்தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை கட்சி தலைமை அறிவித்து அதற்கான பட்டியலை நாளை வெளியிடும் என தெரிகிறது.
கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு மட்டும் யாரை தேர்வு செய்ய வேண்டும் என அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஊராட்சி வார்டு உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT