Published : 16 Oct 2021 06:41 PM
Last Updated : 16 Oct 2021 06:41 PM
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 5 மி.மீ., குண்டாறு அணையில் 3 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், குற்றாலம், கடையம், பாவூர்சத்திரம், சுரண்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பல இடங்களில் இடைவிடாது மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய வெங்காயம் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெங்காயத்துக்கு போதிய விலையில்லாததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
அடவிநயினால் அணை, குண்டாறு அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.12 அடியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT