Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பிச் சென்று 45 நாட்களாகியும் இதுவரை எவ்வித துப்பும் கிடைக்காமல் திருச்சி மாநகர போலீஸார் திணறி வருகின்றனர்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் (55). ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட வழக் கில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய் யப்பட்ட இவர், கடந்த 2019-ல் இருந்து திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆக.31-ம் தேதி கணக்கெடுத்த போது இவரைக் காணவில்லை. தனது அறையிலுள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து அதன்வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக திருச்சி மாநகர காவல்துறையினர் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தினர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகளில் சோதனை நடத்தப்பட்டன. மேலும் இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் தொடர்பான அனைத்து விவரங் களையும் குறிப்பிட்டு, அனைத்து விமானநிலையங்களுக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல் (உறையூர்), தயாளன் (கோட்டை), நிக்சன் (பொன்மலை) உள்ளிட்டோ ரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் இதுவரை இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் தொடர்பான எந்த தகவலும் திருச்சி போலீஸாருக்கு கிடைக்க வில்லை. இதனால் அவரைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சிறப்பு முகாமில் தங்கியுள்ள மற்றொரு பல்கேரியன் உட்பட யாருக்குமே இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. இவர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால், அங்கு சில இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினோம். ஆனா லும் பலனில்லை. தற்போதைய சூழலில் ஊர், ஊராக தேடிச் சென்று இவரைக் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை. தொழில்நுட்ப ரீதியாக ஏதாவது தடயம் கிடைக்குமா என பார்த்து வருகிறோம். சிறப்பு முகாமில் இருந்தபோது பெரும்பாலும் செல்போன் மூலம் இணைய வழி அழைப்புகளில் மட்டுமே அவர் பேசி வந்ததால், அதற்குரிய இணைய ஐ.பி எண்களை பெற்று, அவர் யாரிடம் பேசினார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். இது ஒரு சவால் மிகுந்த வழக்கு என்பதால், எவ்வளவு நாட்களுக்குள் இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ்-வை கண்டுபிடிக்க முடியும் என காலக்கெடு நிர்ணயித்து கூற முடியாது. தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்’’ என்றனர்.
கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை
தப்பிச் சென்ற இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ்-வை கண்டறிய திருச்சி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கில் சிக்கும் வெளிநாட்டினர் குறித்த விவகாரங்களைக் கண்காணித்து வரக்கூடிய கியூ பிரிவு போலீஸாரும் இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT