Published : 13 Oct 2021 05:42 PM
Last Updated : 13 Oct 2021 05:42 PM
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு மாவட்ட ஊராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங்களைத் திமுக கைப்பற்றியுள்ளதால் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நெமிலி ஒன்றியத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் குதிரை பேரம் நடைபெற்று வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (அக்.12) தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வேலூர் மாவட்ட ஊராட்சி திமுக வசமாகியுள்ளது.
மொத்தம் 14 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில்13 இடங்களில் திமுகவும், ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சியும் திமுக வசமாகியுள்ளது. மொத்தம் 13 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 12 இடங்களில் திமுகவும், ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக வசம் 13 ஒன்றியங்கள்
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, கணியம்பாடி என 7 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தம் 138 ஊராட்சி வார்டுகளில் திமுக 102, அதிமுக 20, பாமக 7, காங்கிரஸ் 2, சிபிஐ 1, சுயேச்சைகள் 6 பேர் வெற்றிபெற்றுள்ளனர். வேலூர் ஒன்றியத்தில் 11 வார்டுகளில் திமுக 6, அதிமுக 4, சுயேட்சை 1 இடம் பிடித்துள்ளனர். அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள 26 வார்டுகளில் திமுக 22, அதிமுக 2, பாமக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். குடியாத்தம் ஒன்றியத்தில் 31 வார்டுகளில் திமுக 18, சிபிஐ 1, அதிமுக 6, பாமக 2, புரட்சி பாரதம் 1, சுயேச்சைகள் 3 பேர்.
கணியம்பாடி ஒன்றியத்தில் 13 வார்டுகளில் திமுக 7, பாமக 3, அதிமுக 2, சுயேச்சை ஓரிடம். காட்பாடி ஒன்றியத்தில் 21 வார்டுகளில் திமுக 19, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஓரிடம். கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 21 வார்டுகளில் திமுக 17, அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக 13, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, திமிரி, காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் என மொத்தமுள்ள 7 ஒன்றியங்களில் உள்ள 127 வார்டுகளில் திமுக 80, அதிமுக 16, பாமக 17, காங்கிரஸ் 4, அமமுக, பாஜக தலா ஓரிடம், சுயேச்சைகள் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நெமிலியை தவிர்த்த மற்ற 6 ஒன்றியங்களையும் திமுக நேரடியாகக் கைப்பற்றியுள்ளது.
சோளிங்கர் ஒன்றியத்தில் 19 வார்டுகளில் திமுக 10, காங்கிரஸ் 2, பாமக 6, அதிமுக ஓரிடம் பெற்றுள்ளனர். அரக்கோணம் ஒன்றியத்தில் 23 வார்டுகளில் திமுக 17, அதிமுக, பாஜக, அமமுக தலா ஓரிடம், பாமக 3 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். நெமிலி ஒன்றியத்தில் 19 வார்டுகளில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 10 வார்டுகளில் திமுக 5, காங்கிரஸ், அதிமுக, பாமக தலா ஓரிடம், சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வாலாஜா ஒன்றியத்தில் 20 வார்டுகளில் திமுக 14, அதிமுக 3, பாமக, காங்கிரஸ், சுயேச்சை ஆகியோர் தலா ஓரிடம் வெற்றி பெற்றுள்ளனர். ஆற்காடு ஒன்றியத்தில் 17 வார்டுகளில் திமுக 13, அதிமுக 2, பாமக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஓரிடம் வென்றுள்ளனர். திமிரி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் திமுக 13, அதிமுக 4, சுயேட்சை 2 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
நெமிலியில் இழுபறி
நெமிலி ஒன்றியத்தைக் கைப்பற்றத் திமுகவுக்கு 2 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. எனவே, பாமக அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் ஒன்றியத்தைக் கைப்பற்ற திமுக முயற்சி எடுத்து வருகிறது. அதேநேரம், 4 கவுன்சிலர்களைப் பெற்றுள்ள அதிமுக, 5 கவுன்சிலர்களைப் பெற்றுள்ள பாமகவுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே ஒரு சுயேட்சை வேட்பாளர் பாமகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், பாமகவுக்குத் தலைவர் பதவியைக் கொடுத்து துணைத் தலைவர் பதவியை அதிமுக பெறவும் பேச்சுக்கள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT