Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வை தொடங்கியது மத்திய தொல்லியல் துறை

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். உடன்ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மத்திய தொல்லியல் துறை தென்மண்டல கண்காணிப்பாளர் ப.அருண் ராஜ் உள்ளிட்டோர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின. கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு முதன்முதலில் 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ஜாகோர் என்பவர் இங்கு அகழாய்வு செய்து, கிடைத்த பொருட்களை தனது நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

தொடர்ந்து 1899 மற்றும் 1905-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேய தொல்லியல் அதிகாரி அலெக்ஸாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் கடந்த 2004, 2005-ம் ஆண்டுகளில் மத்திய தொல்லியல் துறை சார்பில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்றது. அப்போது ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வின் அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் மத்திய அரசு வெளியிட்டது. தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை முடிவு செய்தது. மத்திய அரசு அனுமதி அளித்ததன் பேரில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய தொல்லியல் துறையால் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி அகழாய்வு பணிகளைத் தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்த ராஜ், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மத்தியதொல்லியல் துறை திருச்சி தென்மண்டல கண்காணிப்பாளர் ப.அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறும்போது, “இந்த அகழாய்வு மிகவும் வரவேற்கத்தக்கது. இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அமையும் 5 முக்கிய அருங்காட்சியகத்தில் ஒன்றாக ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நடக்கும் பணிகளுக்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” என்றார்.

ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்டு சென்னை, லண்டன், பெர்லின் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுஉள்ள பொருட்களை இங்கே கொண்டு வந்து காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x